சிங்கப்பூரில் வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு..!! இன்று முதல் புதிய தளர்வுகள்..!!
சிங்கப்பூரில் வாகன உரிமங்கள் வைத்திருப்பவர்களுக்கு இன்று முதல் (ஜூன் 15) புதிய மாற்றங்கள் நடப்பிற்கு வருகின்றன.
சிங்கப்பூர் 2040 ஆம் ஆண்டிற்குள் பசுமை எரிசக்தி வாகனங்களுக்கு முழுமையாக மாறுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை ஆதரிக்கும் விதமாக சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து காவல்துறை ஜூன் 14ஆம் தேதி அன்று குறிப்பிட்டிருந்தது.
சிறிய மின்சார சரக்கு வாகனங்களும் எரிபொருள் வாகனங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான செயல்பாட்டை கொண்டுள்ளதாக கடந்த ஆண்டு (2025) டிசம்பர் மாதத்தில் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் Class 3 மற்றும் 3A பிரிவில் ஓட்டுனர் உரிமங்களை வைத்திருப்பவர்கள் குறைந்த இடையிலான பொருள்களை ஏற்றி செல்வதற்கு பயன்படுத்தப்படும் அனைத்து விதமான சிறிய மின்சார சரக்கு வாகனங்களையும் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் 3,000 கிலோகிராம் எடைக்கு உட்பட்ட சிறிய மின்சார பேருந்துகளையும் ஓட்ட முடியும். இதற்கு முன்பாக அத்தகைய வாகன உரிமங்கள் வைத்திருந்தவர்கள் 2500 கிலோ கிராம் எடைக்கு உட்பட்ட மின்சார பேருந்துகளை மட்டுமே ஓட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது விதிகள் தளர்த்தப்பட்ட நிலையில் மேற்கண்ட வாகன ஓட்டுனர் உரிமங்கள் வைத்திருப்பவர்கள் சிறிய மின்சார சரக்கு வாகனங்களையும் சிறிய மின்சார பேருந்துகளையும் இயக்குவதற்கான கூடுதல் அனுமதிகளை பெறவேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் ஓட்டுநர் உரிமங்களிலும் எந்த வித மாற்றமும் செய்யப்படாது.
பெரிய மின்சார வாகனங்களை Class 3 மற்றும் 3A பிரிவு ஓட்டுநர் உரிமங்கள் வைத்திருப்பவர்கள் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த புதிய தளர்வுகளை மீறி பெரிய மின்சார வாகனங்களை ஓட்டி பிடிபடுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.