சிங்கப்பூர் கல்வி முறை மாற்றத்திற்கு திசைகாட்டும் டெஸ்மண்ட் லீ..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் கல்வி முறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், மூன்று முக்கிய அம்சங்களில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.
பள்ளிகள், சமூக கூட்டாளிகள் மற்றும் அரசு அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து இந்த நோக்கத்தை அடைய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (08.07.25) காலை, புங்கோலில் உள்ள ஒயாசிஸ் தொடக்கப்பள்ளி மற்றும் அதே வளாகத்தில் செயல்படும் கல்வி அமைச்சக மழலையர் பள்ளி ஆகியவற்றுக்கு சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு பேசிய அவர், கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் இது தான் அவரின் முதல் பள்ளிப் பயணம் என தெரிவித்தார்.
“கல்வி அமைச்சின் செயல்பாடுகளை முழுமையாகப் புரிந்து கொள்வதற்காக கடந்த சில வாரங்கள் பல பங்குதாரர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களுடன் உரையாடலில் சென்றுவிட்டன. இன்று பள்ளிகளை நேரில் பார்வையிட தொடங்கினேன். இது தொடரும்,” என்றார் டெஸ்மண்ட் லீ.
அவர் மேலும் கூறும்போது, “மதிப்பெண்களைக் காட்டிலும் குழந்தைகள் கற்றலில் ஆர்வம் செலுத்துவதை அதிகம் வலியுறுத்துகிறோம். அதன் அடிப்படையில் கல்வி முறையை மூன்று அம்சங்களில் மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.
முதலாவதாக, தொடக்கக் கல்வி மற்றும் மழலையர் கல்வி இடையேயான தொடர்பை வலுப்படுத்துவதை அமைச்சர் முக்கியமாகக் கூறினார். ஒயாசிஸ் தொடக்கப்பள்ளி மற்றும் மழலையர் பள்ளி இடையே நெருக்கமான ஒத்துழைப்பு இருப்பதை பார்வையிட்ட அமைச்சர், இது குழந்தைகள் நம்பிக்கையுடன் தொடக்கக் கல்விக்குச் செல்ல உதவுகிறது என்றும், இந்த ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தும் திட்டம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இரண்டாவதாக, வாழ்நாள் முழுவதும் கற்றல் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் மாணவர்களுக்கு ஆரம்பத்திலேயே உரிய மனப்பாங்கு உருவாக வேண்டும் என்றும், அதற்கேற்ப கல்வி முறையில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
மூன்றாவதாக, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்க, பள்ளிகள் சமூக கூட்டாளிகள், இலாப நோக்கற்ற அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் வழிகள் ஆராயப்படும் என அமைச்சர் கூறினார்.
தொடக்கக் கல்வி, சமூக ஒத்துழைப்பு மற்றும் கற்றல் ஆர்வம் ஆகிய மூன்றிலும் கல்வி அமைச்சகம் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து செயல்பட இருப்பதாக டெஸ்மண்ட் லீ இறுதியாகக் குறிப்பிட்டார்.