இந்தியா: பணத்தை வீசி தப்பிக்க முயன்ற போதை கும்பல்..!! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் காவலர்களிடமிருந்து தப்பிப்பதற்காக சாலையில் பணத்தை வீசிவிட்டு திரைப்பட பாணியில் தப்பிக்க முயன்ற போதைப் பொருள் கடத்தல் கும்பலை காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி அதிரடியாக கைது செய்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம், சோன்பத்ரா பகுதியில் காவலர்கள் வழக்கமான சுற்றுக் காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு ஹோண்டா சிட்டி சொகுசு கார் ஒன்று காவலர்கள் தடுத்து நிறுத்துவதைப் பொருட்படுத்தாமல் அதிவேகமாக சென்றுள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த காவலர்கள் உடனடியாக அந்த காரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதையெடுத்து கடத்தல் கும்பல் தங்களது காரால் காவலர்களின் வாகனத்தை அடுத்தடுத்த பலமுறை பலமாக இடித்து தள்ளி உள்ளனர். இதில் காவலர்களது வாகனம், பழுதடைந்து பாதியிலேயே நின்றுள்ளது.
சற்றும் தளராத காவலர்கள் அங்கிருந்த ஒரு உள்ளூர்வாசி ஒருவரின் காரை அவசரமாக பெற்றுக்கொண்டு கடத்தல்காரர்களைத் தொடர்ந்து விரட்டி சென்றுள்ளனர்.
காவலர்களின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக அந்த கும்பல் ஒரு வித்தியாசமான வழியை கையாண்டனர். பொதுமக்கள் பணத்தை எடுப்பதற்கு ஓடி வந்தால் காவலர்களின் துரத்தல் நடவடிக்கை தடைபடுமென்று எண்ணியவர்கள் தாங்களிடம் இருந்த 100 ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசி சென்றனர்.
ஆனால் பொதுமக்களோ அந்த பணத்தை பொருட்படுத்தவில்லை. அதனால் காவலர்கள் தொடர்ந்து கும்பலை துரத்திச் சென்றனர். ஒரு கட்டத்தில் தப்பிக்க வழியில்லாமல் கடத்தல் கும்பல் காவலர்கள் மீது துப்பாக்கியால் சுடத் தொடங்கியது. இதற்கு பதிலடியாக காவலர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் கடத்தல்காரர்களில் ஒருவருக்கு காலில் குண்டு அடிபட்டது. உடனடியாக சுற்றி வளைத்த காவலர்கள் காரில் இருந்த அந்த கடத்தல் கும்பலைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.49 லட்சம் மதிப்புடைய தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களும், ரூ.50,000 ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த கும்பலானது ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து பஞ்சாப் மாநிலத்திறக்குப் போதைப் பொருள்களை கடத்திச் செல்ல முயன்றதும், இதேபோல் அவர்கள் பலமுறை இவ்வாறு போதை பொருள் கடத்தியதும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்த சோன்பத்ரா காவலர்கள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.