சிங்கப்பூரில் புதிய குடிவரவு சட்டம் அமல்..! முதல் நபருக்கு நீதிமன்றம் தண்டனை!

சிங்கப்பூரில் புதிய குடிவரவு சட்டம் அமல்..! முதல் நபருக்கு நீதிமன்றம் தண்டனை!

சிங்கப்பூரின் திருத்தப்பட்ட புதிய குடிவரவு சட்டத்தின் கீழ், மனைவியின் போலி அடையாளம் பற்றி தனக்கு தெரியாது என்று கூறிய போதிலும், விசா விண்ணப்பத்தில் தவறான விவரங்களைச் சமர்ப்பித்த குற்றத்திற்காக சிங்கப்பூர்வாசியான டான் கிம் லாம் (வயது 65) என்பவர் தண்டிக்கப்பட்டுள்ளார்.

டிசம்பர் 31, 2024 அன்று முதல் நடைமுறைக்கு வந்த திருத்தப்பட்ட குடிவரவு சட்டம் 1959 -ன் கீழ், தண்டிக்கப்படும் முதல் நபர் டான் ஆவார் .

ஜூலை 10ஆம் தேதியன்று நீதிமன்றம் அந்த நபருக்கு $2,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

டானின் மனைவி லின் சியாவோமிங் (வயது 49) என்ற சீனக் குடிமகள் ஆவார். இவர் கடந்த 2002ல் சிங்கப்பூருக்கு வந்துவிட்டு, விசாகாலம் முடிந்த பின்னும்ம் சட்டவிரோதமாக சிங்கப்பூரில் தங்கி இருந்துள்ளார்.

பின்னர் அவர் சீனாவுக்கு தப்பித்து சென்றுள்ளார். அதன் பின்னர் 2009 முதல் 2015 வரை, சிங்கப்பூர் குடிவரவு சோதனைகளில் இருந்து தப்பிக்க மற்றொருவரின் போலி அடையாளத்தையும், கடவுச்சீட்டையும் (Passport) சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு பலமுறை பயன்படுத்தி வந்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஏப்ரலில் டான் மற்றும் லின் இருவரையும் சீனாவில் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது மனைவி லின் சிங்கப்பூரில் தங்குவதற்காக நீண்ட கால வருகை அனுமதிக்கு (LTVP) டான் விண்ணப்பித்திருந்தார்.

அந்த விண்ணப்பத்தில் தன் மனைவிக்கு வேறு எந்த போலி அடையாளமோ அல்லது மாற்று விவரங்களோ இல்லை என்று அவர் உறுதியளித்திருந்தார்.

விசாரணையில் தன் மனைவி முன்பு போலி அடையாளத்தைப் பயன்படுத்தியது தனக்கு தெரியாது என்று டான் கூறியுள்ளார். ஆனால் புதிய சட்டத்தின்படி, ஒரு விசா விண்ணப்பத்திற்கு உள்ளூர் பொறுப்பாளராக கையெழுத்திடுபவர் விண்ணப்பதாரரின் விவரங்கள் உண்மையானவை தானா என்பதை சரி பார்க்க வேண்டியது அவர்களின் கடமையாகும்.

‘எனக்கு தெரியாது’ என்று கூறுவதன் மூலம் தங்களின் பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது எனவும்,விண்ணப்பத்தில் சமர்ப்பிக்கப்படும் தவறான அல்லது தவறாக வழி நடத்தும் தகவல்களுக்கு பொறுப்பாளரே முழு பொறுப்பு எனவும் ICA தெளிவுபடுத்தி உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக $4,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்த வழக்கின் மூலம் வெளிநாட்டினருக்கு விசா அல்லது அனுமதிக்கு விண்ணப்பிக்கும் உள்ளூர் சிங்கப்பூர்வாசிகளின் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் ICA கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.