9 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பெண்..! 6 பேர் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு..!!

9 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பெண்..! 6 பேர் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு..!!

சிங்கப்பூரில் பல்வேறு பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் பங்கேற்றது, அவற்றை ஏற்பாடு செய்தது தொடர்பாக 6 பேர் மீது இன்று (செப்டம்பர் 9) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

22 முதல் 36 வயதுக்குட்பட்ட இந்த 6 பேரும், பெரும்பாலும் Public Order Act எனப்படும் பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

குற்றச்சாட்டுகளில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்தானா அருகே நடைபெற்ற பேரணி, மெரினா தடுப்பணை பகுதியில் காசா தொடர்பாக நடத்தப்பட்ட பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் 33 வயதான எலிஜா டே அதிகபட்சமாக 9 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் சாங்கி சிறைச்சாலை அருகே மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற மெழுகுவர்த்தி அஞ்சலி நிகழ்வுகளில் பங்கேற்றதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

மேலும், 2024ஆம் ஆண்டு Ubi பகுதியில் உள்ள The Arts & Civil Space என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்வில் குறிப்பிட்ட அரசியல் முழக்கத்தை எழுப்பியதாகவும் Elijah Tay மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

மற்றொரு குற்றச்சாட்டில், 2025ஆம் ஆண்டு தேசிய நீதிமன்ற பகுதியில் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதாகக் கூறப்பட்டுள்ளது. தேசிய நீதிமன்ற பகுதி சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமிரா மோக்லிஸ் என்பவர் 2024 அக்டோபர் 27ஆம் தேதி மெரினா தடுப்பணை பகுதியில், 2023 அக்டோபர் 7ஆம் தேதிக்குப் பிறகு காசாவில் உயிரிழந்த குழந்தைகளை நினைவுகூரும் வகையில் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

டயானா நூர் முகமது இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். இதில் ஒன்று, 2024 பிப்ரவரி 2ஆம் தேதி இஸ்தானா அருகே பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் பங்கேற்றது தொடர்பானது. மற்றொன்று மெரினா தடுப்பணை பொதுக்கூட்டம் தொடர்பானது.

மேலும், நூர் சப்ரினா கமால் மெரினா தடுப்பணை பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்ததாகவும், அங்கு ஒரு அரசு ஊழியரிடம் அவமதிக்கும் வகையில் சைகை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவரது சகோதரி நூர் சப்ரினா கமால், இஸ்தானா பேரணியில் பங்கேற்றதுடன் மெரினா தடுப்பணை பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்ததாகவும் குற்றச்சாட்டு எதிர்கொள்கிறார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான, கியால் சின் மின் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் சிங்கப்பூர் நிரந்தரக் குடியிருப்பாளராக உள்ளார். 2024 ஜூன் 7ஆம் தேதி Novena MRT நிலையம் அருகே மற்றவர்களுடன் ஒன்றுகூடி பின்னர் உள்துறை அமைச்சகத்துக்குச் சென்று, இன நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிரான மனுவை சமர்ப்பித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

வழக்கறிஞர்கள் வழக்கை ஒத்திவைக்கவும், அவசியம் இல்லாத பட்சத்தில் அடுத்தடுத்த விசாரணைகளுக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தனர். நீதிமன்றம் இரு கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டது.

Public Order Act கீழ் தடை செய்யப்பட்ட பேரணியை ஏற்பாடு செய்தது நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 6 மாதங்கள் சிறைத்தண்டனை, S$10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தடை செய்யப்பட்ட பேரணியில் பங்கேற்றது நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக S$5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். இன நல்லிணக்கத்தை பாதிக்கும் செயலை தெரிந்தே மேற்கொண்டது நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.