உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி.!டயர்களுக்குள் மறைத்த 1,200 சிகரெட்டுகள் பறிமுதல்!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி.!டயர்களுக்குள் மறைத்த 1,200 சிகரெட்டுகள் பறிமுதல்!

சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் வாடகை காரின் டயர்களுக்குள் 1200க்கும் மேற்பட்ட கடத்தல் சிகரெட்டுகள் பொட்டலத்தை மறைத்து கடத்த முயன்ற 47 வயது உள்ளூர் நபரை ICA அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஜூலை 16ஆம் தேதி அன்று குடிவரவு சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில் இந்த கடத்தல் கண்டறியப்பட்டுள்ளது.

ICA அதிகாரிகள் காரின் டயர்களை வெட்டி அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் நிற சிகரெட் பொட்டலங்களை மீட்டெடுக்கும் காட்சியானது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது .

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாடகை கார் ஒன்றை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அப்போது காரின் பின்பக்க டயர் ஒன்று பஞ்சர் ஆகி இருந்துள்ளது .

அதனை கவனித்த அதிகாரிகள் கட்டர் கருவியைப் பயன்படுத்தி காரின் 4 டயர்கள் மற்றும் ஒரு கூடுதல் மாற்று டயர் என மொத்தம் 5 டயர்களையும் வெட்டி பார்த்துள்ளனர்.

டயர்களின் உட்புறச் சுவர்களில் வரிசையாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,200க்கும் மேற்பட்ட தீர்வையற்ற கடத்தல் சிகரெட்டு பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன.


கைது செய்யப்பட்டுள்ள 47 வயது சிங்கப்பூர்வாசி மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகள் அனைத்தும் மேற்படி விசாரணைக்காக சிங்கப்பூர் சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சுங்க சட்டம் மற்றும் ஜிஎஸ்டி(GST) சட்டத்தின்படி, தீர்வையற்ற பொருட்களைக் கடத்துவது, விற்பது அல்லது வைத்திருப்பது என்பது மிக கடுமையான குற்றமாகும்.

கைது செய்யப்பட்டவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் ஏமாற்றப்பட்ட வரித்தகையைப் போல 40 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும்.

அத்துடன் 6 ஆண்டுகள் வரை சிறைதண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்பட வாய்ப்புள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் அரசாங்கத்தால் நிரந்தரமாக பறிமுதல் செய்யப்படும்.