சிங்கப்பூரில் பெரிய வேலைவாய்ப்பு மோசடி.! MOM சோதனையில் வெளிச்சத்துக்கு வந்த போலி CPF!

சிங்கப்பூரில் பெரிய வேலைவாய்ப்பு மோசடி.! MOM சோதனையில் வெளிச்சத்துக்கு வந்த போலி CPF!

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) நடத்திய அதிரடி சோதனையில் போலி தொழிலாளர்கள் மூலம் வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீட்டை ஏமாற்றிய குற்றச்சாட்டின் கீழ் ஒரு கும்பலைச் சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

ஜூலை 21ஆம் தேதி அன்று நாட்டின் பல இடங்களில் இந்த அமலாக்க சோதனையை MOM மேற்கொண்டது.

இந்த சோதனையின் முடிவில் 4 நிறுவன இயக்குநர்கள், 9வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் வேலை வாய்ப்பு முகமையின் 1 முக்கிய பொறுப்பாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களின் கீழ் உண்மையில் வேலை செய்யாத 139 உள்ளூர் வாசிகளுக்கு போலியாக மத்திய சேம நிதி(CPF) பங்களிப்பை செலுத்தியுள்ளன.

சிங்கப்பூர் சட்டப்படி, உள்ளூர் ஊழியர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க முடியும். இந்த விதிமுறையை ஏமாற்றி, தங்கள் வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீட்டை சட்டவிரோதமாக அதிகரிப்பதற்காகவே இந்த போலிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டன.

இவர்கள் போலியான விபரங்களை சமர்ப்பித்தது மட்டுமின்றி, வேலைவாய்ப்பு தொடர்பான லஞ்சப்பணம் பெற்றதாகவும், முறையான உரிமம் இன்றி வேலைவாய்ப்பு முகமை நடத்தியதாகவும் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகிறது.

வெளிநாட்டு மனிதவள வேலை வாய்ப்பு சட்டத்தின் கீழ், போலி விவரங்களை சமர்ப்பித்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், $20,000 வரை அபராதம் 2 ஆண்டுகள் வரை சிறைதண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்பட வாய்ப்புள்ளது. அத்துடன் அந்த நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க தடையும் விதிக்கப்படும்.

வேலைவாய்ப்பு முகமை சட்டத்தின் கீழ், உரிமம் இன்றி முகமை நடத்தினால் $80,000 வரை அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

தங்களின் விவரங்களை நிறுவனங்களுக்கு கொடுத்து போலி CPF பெற உடந்தையாக இருக்கும் உள்ளூர்வாசிகளும் குற்றவாளிகளாக கருதப்பட்டு, அவர்களுக்கும் 2 ஆண்டுகள் வரை சிறைதண்டனை அல்லது அபராதம் மிதிக்கப்படலாம் MOM எச்சரித்துள்ளது.