சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி கஞ்சா பறிமுதல்.! 2 பெண்கள் கைது.!!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தின் பேங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருளை கடத்தி வந்ததாகக் கூறப்படும் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பெருமளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சந்தேகத்துக்குரிய பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் தீவிரமாகச் சோதனையிட்டனர்.
அப்போது, வடஇந்தியாவைச் சேர்ந்த இரண்டு பெண் பயணிகளின் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கிலோ உயர் ரக கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது. அனைத்துலகச் சந்தையில் இதன் மதிப்பு சுமார் ரூ.6 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, போதைப்பொருளைக் கடத்தி வந்ததாகக் கூறப்படும் இரு பெண்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இருவருக்கும் அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் நேரடித் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தக் கடத்தலின் பின்னணியில் செயல்பட்டவர்கள் குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் யாருக்காகக் கடத்தி வரப்பட்டது, சென்னையில் யாருக்கு விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டது என்பது குறித்து காவல்துறையினரும் சுங்கத்துறை அதிகாரிகளும் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.