‘Ghost Employees’ மோசடி..? சிங்கப்பூரில் 4 பேர் கைது.. 21 பேரிடம் விசாரணை..!

‘Ghost Employees’ மோசடி..? சிங்கப்பூரில் 4 பேர் கைது.. 21 பேரிடம் விசாரணை..!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்துவது தொடர்பான சட்டத்தை மீறியதாக சந்தேகிக்கப்படும் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த 2 இயக்குநர்கள் மற்றும் 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ‘Ghost Employees’ எனப்படும் ‘போலி ஊழியர்கள்’ ஏற்பாட்டில் தொடர்புடையதாகக் கருதப்படும் 21 பேர் விசாரணைக்கு உதவி செய்து வருகின்றனர்.

மனிதவள அமைச்சகம் (MOM) இன்று (செப்டம்பர் 4) வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 2ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையின்போது கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த 2 இயக்குநர்கள் மற்றும் 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தை (Employment of Foreign Manpower Act) மீறியுள்ளார்களா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, வேலை அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது தவறான தகவல்களை அளித்தல் மற்றும் வேலைவாய்ப்புடன் தொடர்புடைய பலன்களைப் பெறுதல் போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

முதற்கட்ட விசாரணையில், நிறுவனத்தில் உண்மையில் பணியாற்றாத சில சிங்கப்பூர் குடிமக்களின் பெயரில் CPF பங்களிப்புகளைச் செலுத்தி, நிறுவனத்தால் பணியமர்த்தக்கூடிய வெளிநாட்டு ஊழியர்களின் quota-வை அதிகரித்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

அதிகரிக்கப்பட்ட அந்த quota-வை பயன்படுத்தி, நிறுவனம் பின்னர் மேலும் அதிகமான வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கு அழைத்து வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இவ்வாறு போலியான முறையில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான பணியமர்த்தல் quota-வை அதிகரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான வேலை அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது தவறான தகவல்களைச் சமர்ப்பித்தது நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு அதிகபட்சம் S$20,000 அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அதேபோல், வேலைவாய்ப்புடன் தொடர்புடைய பலன்களைப் பெற்றதாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் S$30,000 அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும், நிறுவனத்துக்கு அதிகமான வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் quota கிடைக்க வேண்டும் என்பதற்காக, போலியான CPF பதிவுகளை உருவாக்குவதற்கு தங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்கியவர்களும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.
அத்தகைய குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கும் S$20,000 வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

 

வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்துவதற்கான விதிமுறைகளை மீறி, போலியான பதிவுகள் மூலம் quota-வை அதிகரிப்பது போன்ற செயல்கள் சட்டத்தின் முன் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

சிங்கப்பூரில் வேலை செய்யும் ஒவ்வொருவரும், நிறுவனங்களும் விதிமுறைகளை மதித்து செயல்படுவது மட்டுமே பாதுகாப்பான பாதை. சட்டத்தை மதித்து சம்பாதிக்கும் ஒவ்வொரு டாலரும் நிம்மதியான வாழ்க்கையைத் தரும்; சட்டத்தை மீறி சம்பாதிக்கும் பணம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது ஒருநாள் மிகப்பெரிய விலையை கேட்கலாம்.