புக்கிட் தீமா விரைவுச்சாலையில் பயங்கர விபத்து..!! 45 வயது பெண் பலி!
சிங்கப்பூர்: புக்கிட் தீமா விரைவுச்சாலையில் (BKE) ஏற்பட்ட சாலை விபத்தில் 45 வயது பெண் மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) காலை சுமார் 11.30 மணியளவில், தீவு விரைவுச்சாலையை (PIE) நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு மோட்டார்சைக்கிளோட்டிகள் சம்பந்தப்பட்டிருந்தனர். அவர்களில் 32 வயது ஆண் மோட்டார்சைக்கிளோட்டி சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மற்றொரு 45 வயது பெண் மோட்டார்சைக்கிளோட்டி விபத்தில் சிக்கி சுயநினைவின்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்தில் சம்பந்தப்பட்ட இருவரும் முறையே டான் டோக் செங் மருத்துவமனை மற்றும் உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிங்கப்பூரில் மோட்டார்சைக்கிள்கள் ஒட்டுமொத்த வாகன எண்ணிக்கையில் சுமார் 15% மட்டுமே உள்ளன. இருப்பினும், சாலை விபத்துகளில் மோட்டார்சைக்கிளோட்டிகள் மற்றும் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துகளில் சுமார் 54.8% விபத்துகள் மோட்டார் சைக்கிளோட்டிகளையும் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து சென்றவர்களையும் உள்ளடக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாலை விபத்துகளில் ஏற்பட்ட மரணங்களில் சுமார் 53% மரணங்கள் மோட்டார்சைக்கிளோட்டிகள் அல்லது அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து சென்றவர்களுடன் தொடர்புடையதாக இருந்துள்ளன.
மோட்டார்சைக்கிளோட்டிகள் தொடர்புடைய விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டில் 3,973 சம்பவங்கள் பதிவான நிலையில், கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 4,227 ஆக உயர்ந்துள்ளது.