குயின் ஸ்ட்ரீட்டில் பயங்கர விபத்து..! பேருந்தின் அடியில் சிக்கி 30 வயது பெண் பலி!

சிங்கப்பூரின் புக்கிட்ஸ் பகுதியில் உள்ள குயின் ஸ்ட்ரீட் பேருந்து முனையம் அருகே ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் 30 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக 32 வயதான பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்டோபர் 6ஆம் தேதி இரவு சுமார் 7 மணியளவில் குயின் ஸ்ட்ரீட் மற்றும் அரபு ஸ்ட்ரீட் சந்திப்பில் சாலை விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் (SCDF) தகவல் கிடைத்தது.
விபத்து தொடர்பான விசாரணைகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சம்பவத்தில் தொடர்புடைய பேருந்து, சிங்கப்பூர்–ஜொகூர் இடையே இயக்கப்படும் Causeway Link நிறுவனத்தின் CW2 சேவையைச் சேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின் ஸ்ட்ரீட் பேருந்து முனையத்தில் இருந்து மலேசியாவின் ஜொகூர் பாருவுக்கு செல்லும் பயணிகள் இந்த சேவையைப் பயன்படுத்துகின்றனர்.
விபத்து காரணமாக குயின் ஸ்ட்ரீட் பேருந்து முனையம் தற்காலிகமாக மூடப்பட்டது. SBS Transit-ன் 170ஆம் எண் பேருந்து சேவையும் சில நேரம் அந்த முனையத்தில் இருந்து இயக்கப்படவில்லை.
பயணிகள் அரபு ஸ்ட்ரீட் மற்றும் குயின் ஸ்ட்ரீட் சந்திப்பு அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக காத்திருப்பு இடத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
பின்னர், இரவு சுமார் 11:50 மணியளவில் பேருந்து முனையம் மீண்டும் திறக்கப்பட்டதுடன், 170ஆம் எண் பேருந்து சேவையும் வழக்கமான முறையில் இயங்கத் தொடங்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக Causeway Link நிறுவனத்தை நடத்தும் Handal Indah நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
நிறுவனம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதாகவும், நடைபெற்று வரும் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர் மற்றும் பேருந்தில் இருந்த மற்ற பயணிகளுக்கும் தேவையான ஆதரவு வழங்கப்பட்டு வருவதாக நிறுவனம் கூறியுள்ளது.
விபத்துக்கான முழுமையான காரணம் மற்றும் சம்பவத்தின் சூழ்நிலைகள் குறித்து காவல்துறையின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
