சிங்கப்பூரில் 7.82 லட்சம் பேருக்கு S$1,500 வரை கூடுதல் தொகை..!! டிசம்பர் 8-க்குள் CPF கணக்கில் வரவு!

சிங்கப்பூரில் ஓய்வுக்காலச் சேமிப்பை அதிகரிக்கும் நோக்கில், தகுதிபெறும் 7 லட்சத்து 82 ஆயிரத்திற்கும் அதிகமான மூத்த குடிமக்களுக்கு S$500 முதல் S$1,500 வரை மத்திய சேமநிதி (CPF) கணக்கில் கூடுதல் தொகை வழங்கப்படவுள்ளது.
இந்தத் தொகை வரும் டிசம்பர் 8ஆம் தேதிக்குள் தகுதியுள்ளவர்களின் CPF கணக்குகளில் தானாகவே வரவு வைக்கப்படும் என்று மனிதவள அமைச்சும் (MOM), மத்திய சேமநிதிக் கழகமும் (CPF Board) இணைந்து அறிவித்துள்ளன.
அரசாங்கத்தின் 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முதன்முதலாக அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், ஓய்வுக்காலத்திற்குத் தேவையான சேமிப்பை முழுமையாக உருவாக்க முடியாத நிலையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு உதவும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக அரசாங்கம் மொத்தம் S$1.04 பில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.
யாருக்கெல்லாம் இந்தத் தொகை கிடைக்கும்?
இந்த CPF கூடுதல் தொகையைப் பெறுவதற்கு சில தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
👉 சிங்கப்பூர் குடிமக்களாகவும், சிங்கப்பூரில் வசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
👉 1976ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
👉2025 டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி, CPF ஓய்வுக்காலச் சேமிப்பு S$110,200-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
👉 வசிக்கும் வீட்டின் வருடாந்திர மதிப்பு (Annual Value) S$31,000-ஐத் தாண்டக்கூடாது.
👉 ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துகளைச் சொந்தமாக வைத்திருக்கக் கூடாது.
இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் குடிமக்களுக்கே கூடுதல் தொகை வழங்கப்படும்.
எவ்வளவு தொகை கிடைக்கும்?
ஒருவரின் CPF ஓய்வுக்காலச் சேமிப்பு மற்றும் அவர்கள் வசிக்கும் வீட்டின் வருடாந்திர மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும் தொகை மாறுபடும்.
S$1,500 பெறுபவர்கள்:
வசிக்கும் வீட்டின் வருடாந்திர மதிப்பு S$21,000 அல்லது அதற்குக் குறைவாக இருக்க வேண்டும். அதேசமயம், CPF ஓய்வுக்காலச் சேமிப்பு S$60,000-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
S$1,000 பெறுபவர்கள்:
வீட்டின் வருடாந்திர மதிப்பு S$21,000 அல்லது அதற்குக் குறைவாகவும், CPF ஓய்வுக்காலச் சேமிப்பு S$60,000 முதல் S$110,200-க்கும் குறைவாகவும் இருந்தால் S$1,000 வழங்கப்படும்.
S$500 பெறுபவர்கள்:
வசிக்கும் வீட்டின் வருடாந்திர மதிப்பு S$21,000-க்கும் அதிகமாகவும், S$31,000-க்கு மிகாமலும் இருந்தால், CPF ஓய்வுக்காலச் சேமிப்பு S$110,200-க்கும் குறைவாக இருக்கும் தகுதியுள்ளவர்கள் S$500 பெறுவார்கள்.
இந்தத் தொகை தகுதியுள்ளவர்களின் CPF கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும்.
55 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அவர்களின் Retirement Account (RA) கணக்கிலும், 55 வயதுக்குக் குறைவானவர்களுக்கு Special Account (SA) கணக்கிலும் தொகை வரவு வைக்கப்படும். ஏற்கெனவே முழு ஓய்வுக்காலச் சேமிப்புத் தொகையைப் பூர்த்தி செய்துள்ள 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சில உறுப்பினர்களுக்கு, விதிமுறைகளின்படி Ordinary Account (OA) கணக்கில் தொகை செலுத்தப்படும்.
இந்தக் கூடுதல் தொகை CPF கணக்குகளில் இருக்கும் காலத்தில் அதற்குரிய வட்டியும் கிடைக்கும். இதன் மூலம் பயனாளிகள் தங்களின் ஓய்வுக்காலச் சேமிப்பை மேலும் அதிகரிக்க முடியும்.
இந்தத் தொகையைப் பெறுவதற்கு தனியாக எந்தவொரு விண்ணப்பமும் செய்யத் தேவையில்லை. தகுதியுள்ளவர்களின் CPF கணக்குகளில் அரசாங்கம் தானாகவே தொகையைச் செலுத்தும். தொகை வரவு வைக்கப்பட்ட பின்னர், gov.sg என்ற அதிகாரப்பூர்வ அனுப்புநர் பெயரில் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
Singpass கணக்கில் கைப்பேசி எண்ணைப் பதிவு செய்யாதவர்களுக்கு, அவர்களின் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்படும். தகுதி மற்றும் கூடுதல் விவரங்களைப் பொதுமக்கள் govbenefits.gov.sg இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
CPF கூடுதல் தொகை வழங்கப்படுவது தொடர்பாக மோசடிகள் நடைபெறாமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் நினைவூட்டியுள்ளனர்.
அரசாங்க அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு யாராவது தொலைபேசியில் தொடர்புகொண்டு பணம் அனுப்புமாறோ, வங்கிக் கணக்கு விவரங்களை வழங்குமாறோ கேட்டால் அவற்றை நம்ப வேண்டாம்.
தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படும் தொகை நேரடியாக CPF கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதால், இடைத்தரகர்கள் மூலமாகவோ தனிப்பட்ட பணப்பரிமாற்றம் மூலமாகவோ எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை.
ஓய்வுக்காலச் சேமிப்பை வலுப்படுத்தும் இந்தத் திட்டத்தின் மூலம் சிங்கப்பூரில் 7.82 லட்சத்திற்கும் அதிகமான மூத்த குடிமக்கள் பயனடையவுள்ளனர்.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
