S$4,000 சம்பள ஆசை! 19 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய சிங்கப்பூர் ஆடவர்..மரண தண்டனை விதிக்கப்படுமா?

S$4,000 சம்பள ஆசை! 19 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய சிங்கப்பூர் ஆடவர்..மரண தண்டனை விதிக்கப்படுமா?

மலேசியாவின் ஈப்போவில் உள்ள சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்தில் (Sultan Azlan Shah Airport) சுமார் 19 கிலோகிராம் கஞ்சாவுடன் பிடிபட்ட சிங்கப்பூர் ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவருக்குப் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளதால், அவர் தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

29 வயதான சென் லோங் (Chen Long) என்பவர் நவம்பர் 19ஆம் தேதி ஈப்போ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவருக்கு எதிரான குற்றச்சாட்டு மாண்டரின் மொழியில் வாசிக்கப்பட்டபோது, அதைப் புரிந்துகொண்டதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்பதால், அவரிடம் குற்றத்தை ஒப்புக்கொள்கிறாரா என்பது தொடர்பாக எந்தப் பதிவும் செய்யப்படவில்லை.

கடந்த நவம்பர் 8ஆம் தேதி காலை சுமார் 6:20 மணியளவில் ஈப்போ விமான நிலையத்தின் பயணப்பெட்டிகள் சோதனை செய்யும் பகுதியில் சென் லோங் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவரது பயணப்பெட்டியில் சுமார் 19,040 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது சந்தேகத்திற்கிடமான பயணப்பெட்டி கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் அதனைச் சோதனையிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆரம்பக்கட்ட விசாரணையில், சென் லோங் இணையத்தில் அதிகச் சம்பளம் வழங்குவதாகக் கூறப்பட்ட வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்தது தெரியவந்துள்ளது.

போலி வர்த்தக முத்திரைகளைக் கொண்ட ஆடம்பரப் பொருள்கள் அடங்கிய பயணப்பெட்டியை லண்டனுக்குக் கொண்டு சென்றால் S$4,000 வழங்கப்படும் என்று அவரிடம் கூறப்பட்டதாக முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பயணப்பெட்டியைத் திறந்து உள்ளே என்ன இருக்கிறது என்பதைச் சோதிக்கவில்லை என்று சென் லோங் கூறியுள்ளார்.

மேலும், அவரிடம் நடத்தப்பட்ட சிறுநீர்ப் பரிசோதனையில் போதைப்பொருள் உட்கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

மரண தண்டனை விதிக்கப்படாத பட்சத்தில் குறைந்தது 12 பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்படலாம்.

சென் லோங்கிற்கு நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி வேதியியல் ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறவுள்ளது.