GTA 6 விளையாட மனைவியிடம் 10 நாள் அனுமதி கேட்ட கணவர்..!! சிங்கப்பூரில் வைரலான ஒப்பந்தம்!

சிங்கப்பூர் : சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகவுள்ள GTA 6 (Grand Theft Auto 6) வீடியோ கேமை விளையாடுவதற்காக, சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதியினர் உருவாக்கிய நகைச்சுவையான ஒப்பந்தம் சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.
GTA 6 வெளியீட்டை எதிர்பார்த்து உலகம் முழுவதும் உள்ள கேமிங் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், சிலர் விளையாட்டுக்காக அலுவலக விடுப்புத் திட்டங்களையும் பகிர்ந்து வருகின்றனர். இந்தச் சூழலில், சிங்கப்பூரைச் சேர்ந்த யூடியூபர் ஜூலியன் டிரே (Julian Tray) தனது மனைவி லிசா சான் (Lisa Chan) உடன் செய்துகொண்ட ஒப்பந்தம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இந்த நகைச்சுவை ஒப்பந்தத்தின்படி, நவம்பர் 19 முதல் நவம்பர் 29 வரை 10 நாட்களுக்கு GTA 6 விளையாட்டைத் தனது விருப்பம்போல் விளையாட மனைவி அனுமதிக்க வேண்டும் என ஜூலியன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் விளையாடிக்கொண்டிருக்கும்போது மனைவி சில குறிப்பிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும் ஒப்பந்தத்தில் நகைச்சுவையாகக் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, “இது வெறும் கேம்தானே?”, “அதை விட்டுவிட்டு மற்ற வேலைகளைப் பார்க்கலாமே?” மற்றும் “பிறகு விளையாடலாமே?” போன்ற கேள்விகளையும் கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், எந்த நேரத்தில் விளையாடப் போகிறார் என்பது தொடர்பான கேள்விகளையும் கேட்கக் கூடாது என்ற நிபந்தனையும் இடம்பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு சுவாரசியமான நிபந்தனை இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
GTA 6 விளையாட்டில் கதாபாத்திரங்கள் மூலம் பெண்களுடன் டேட்டிங் செய்வது போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருந்தால், அதனை நிஜ வாழ்க்கைத் துரோகமாகவோ (Cheating) அல்லது திருமண உறவுக்கு எதிரான செயலாகவோ கருதக் கூடாது என்றும் ஜூலியன் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் சட்டப்பூர்வமான ஆவணம் அல்ல. தம்பதியினர் விளையாட்டாக உருவாக்கிய ஒன்றாகும்.
ஜூலியன் பகிர்ந்த இந்த ஒப்பந்தம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சிலர் தம்பதியினரின் நகைச்சுவை உணர்வைப் பாராட்டி வருகின்றனர். அதேவேளையில், சிலர் இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் குறித்து எதிர்மறையான கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
இருப்பினும், இது வெறும் நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் என்பதைத் தம்பதியினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
GTA தொடரின் முந்தைய பாகங்களான GTA 5 மற்றும் Vice City ஆகியவற்றை விளையாடிய அனுபவங்களை ரசிகர்கள் மீண்டும் நினைவுகூர்ந்து வரும் நிலையில், GTA 6 வெளியீட்டைச் சுற்றியுள்ள இந்தச் சுவாரசியமான சம்பவமும் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
