சிங்கப்பூரில் 8 சிறுவர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்..!! புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கி அசத்தல்!!

சிங்கப்பூரில் டவுன்ஸ்வில் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த எட்டு சிறுவர்கள், தங்களது சொந்தப் பணத்தில் சுமார் 159 சிங்கப்பூர் டாலர் செலவில் துரித உணவுகளை வாங்கி, கட்டுமானத் தளத்தில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆங் மோ கியோ பகுதியில் உள்ள கிராஸ் ஐலேண்ட் லைன் (Cross Island Line) கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திற்குச் சென்ற சிறுவர்கள், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விங்ஸ்டாப் (Wingstop) கடையில் வாங்கிய வறுத்த கோழி உள்ளிட்ட துரித உணவுகளை வழங்கியுள்ளனர்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. காணொளியில், சிறுவர்கள் உணவுப் பையை எடுத்துக்கொண்டு கட்டுமானத் தளத்தின் நுழைவாயிலுக்குச் செல்வதும், அங்கிருந்த தொழிலாளர்களிடம் உணவை வழங்குவதும் இடம்பெற்றுள்ளது.
அப்போது ஒரு சிறுவன், தான் இந்த உணவைத் தொழிலாளர்களுக்கு வழங்க விரும்புவதாக உற்சாகமாகக் கூறுகிறான். மற்றொரு சிறுவன், தாங்கள் டவுன்ஸ்வில் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த நல்ல மாணவர்கள் என்று பெருமையுடன் தெரிவிக்கிறான்.
முதலில் வீடற்றவர்களுக்கு உணவு வழங்கத் திட்டமிட்டதாகக் கூறிய சிறுவன், பின்னர் உணவைப் பெறுபவர்கள் வீடற்றவர்கள் அல்ல, கட்டுமானத் தொழிலாளர்கள் என்று தன்னைத் திருத்திக்கொள்கிறான்.
சிறுவர்கள் வழங்கிய எதிர்பாராத அன்பளிப்பைப் பெற்ற தொழிலாளர் ஒருவர், அவர்களுடன் கைகுலுக்கி நன்றி தெரிவித்தார். காணொளியின் இறுதியில், “உங்கள் சேவைக்கு நன்றி” மற்றும் “சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியதற்கு நன்றி” என்று கூறி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றியை வெளிப்படுத்தினர்.
இந்தச் சிறுவர்களின் செயலைப் பாராட்டி ஏராளமான இணையவாசிகள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். குழந்தைகளுக்கு இத்தகைய நல்ல பண்புகளையும், பிறருக்கு உதவும் மனப்பான்மையையும் கற்றுக்கொடுத்த பெற்றோர்களுக்கும் பள்ளிக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் ஒருவர், படிப்பை முடித்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆனபோதிலும், தனது இளைய பள்ளித் தோழர்களின் செயலை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாகத் தெரிவித்துள்ளார். சிறுவர்கள் பொன்மனம் கொண்டவர்கள் என்றும், நல்ல பள்ளிகள் குழந்தைகளுக்கு சிறந்த விழுமியங்களைக் கற்றுக்கொடுத்து அவர்களின் எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டவுன்ஸ்வில் தொடக்கப் பள்ளியின் மாணவர்களின் இந்தச் செயல் பள்ளியின் நல்ல பண்புகளையும், மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும் சமூகப் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துவதாக இணையவாசிகள் பாராட்டியுள்ளனர்.
இதற்கிடையில், சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையமும் (LTA) இந்த மாணவர்களின் நற்செயலைப் பாராட்டியுள்ளது. நேற்று (நவம்பர் 19) தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இந்த அக்கறையுள்ள மாணவர்கள், கிராஸ் ஐலேண்ட் லைன் கட்டுமானப் பணியாளர்களுக்கு தங்களது அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தியது எங்கள் உள்ளங்களை நெகிழச் செய்தது” என்று தெரிவித்துள்ளது.
சிறிய வயதிலேயே உழைப்பின் மதிப்பையும், பிறருக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய அவசியத்தையும் உணர்ந்து செயல்பட்ட இந்த எட்டு சிறுவர்களின் செயல், சிங்கப்பூர் மக்களிடையே நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
