சிங்கப்பூரில் NETS App-இல் அதிரடி மாற்றம்..!! QR ஸ்கேன் செய்யாமலேயே பணம் செலுத்தலாம்!

சிங்கப்பூரில் NETS App-இல் அதிரடி மாற்றம்..!! QR ஸ்கேன் செய்யாமலேயே பணம் செலுத்தலாம்!

சிங்கப்பூரில் மின்னணுப் பணப்பரிவர்த்தனையை மேலும் எளிதாக்கும் வகையில், NETS நிறுவனம் தனது NETS App செயலியில் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, QR குறியீட்டை ஸ்கேன் செய்வதற்குப் பதிலாக, கைப்பேசியை அருகில் கொண்டு செல்வதன் மூலம் பணம் செலுத்தும் புதிய வசதி டிசம்பர் மாதம் முதல் அறிமுகமாகவுள்ளது.

‘Tap QR to Pay’ எனப்படும் இந்தப் புதிய வசதி முதற்கட்டமாக, சிங்கப்பூரின் தோ பாயோ (Toa Payoh) பகுதியில் இரண்டு மாதங்களுக்குச் சோதனை முறையில் செயல்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம், NFC தொழில்நுட்பம் வசதியுள்ள கைப்பேசிகளைக் கொண்ட பயனர்கள், குறிப்பிட்ட NETS SGQR கட்டண முனையங்களுக்கு அருகில் தங்களது கைப்பேசியைக் கொண்டு சென்றாலே பணப்பரிவர்த்தனையைத் தொடங்க முடியும்.

இதற்காக முன்கூட்டியே NETS செயலியைத் திறக்க வேண்டிய அவசியமில்லை. வழக்கமான QR குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் முறையைப் போன்றே அடுத்தகட்டப் பணப்பரிவர்த்தனை நடைபெறும்.

SGQR முறையின் மூலம் இந்த வசதியைச் சோதனை செய்யும் முதல் கட்டணச் சேவை நிறுவனமாக NETS விளங்குகிறது. சோதனை வெற்றிகரமாக அமைந்தால், இந்த வசதியைச் சிங்கப்பூர் முழுவதும் விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆரம்பத்தில் NETS App செயலியில் மட்டுமே இந்த வசதி கிடைக்கும். பின்னர் இதில் பங்கேற்கும் வங்கிகளின் செயலிகள் மற்றும் மின்னணுப் பணப்பைகளிலும் விரிவுபடுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூருக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பயணிகளும் NETS App மூலம் எளிதாகப் பணம் செலுத்தும் வகையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நவம்பர் 18ஆம் தேதி முதல், வெளிநாட்டுப் பயணிகள் சிங்கப்பூரில் NETS வசதியுடன் கூடிய 50,000க்கும் மேற்பட்ட SGQR கட்டண இடங்களில் NETS App மூலம் பணம் செலுத்த முடியும்.

இதில் உணவங்காடி நிலையங்கள் (Hawker Centres), அக்கம்பக்கக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களும் அடங்கும்.

சிங்கப்பூரின் SGQR கட்டண முறையுடன் தங்களது நாட்டின் பணப்பரிவர்த்தனைச் செயலிகள் இணைக்கப்படாத நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கும் NETS App உதவியாக இருக்கும். இதன் மூலம் பணமாகவோ அல்லது வங்கி அட்டைகள் மூலமாகவோ மட்டுமே பணம் செலுத்த வேண்டிய நிலை குறையும்.

அதேவேளை, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள், தங்களது நாட்டின் வங்கி செயலிகள் அல்லது மின்னணுப் பணப்பைகள் மூலமாகவும் தொடர்ந்து பணம் செலுத்தலாம்.

மேம்படுத்தப்பட்ட NETS App செயலியில் குடும்பத்தினருக்கான Family Wallet வசதியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள், வயதான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்களின் அன்றாடச் செலவுகளைக் கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் முடியும்.

முக்கியக் கணக்கைப் பயன்படுத்துபவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்குத் தனித்தனியாகத் துணைப் பணப்பைகளை (Sub-wallets) உருவாக்கலாம்.

மேலும், ஒவ்வொருவருக்கும் செலவுத் தொகை வரம்புகளை நிர்ணயிக்கவும், அவர்கள் மேற்கொள்ளும் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான அறிவிப்புகளைப் பெறவும் முடியும்.

இதன் மூலம் குடும்ப உறுப்பினர்களின் செலவுகளை ஒரே இடத்தில் நிர்வகிப்பதுடன், முக்கிய வங்கிக் கணக்கில் ஏற்படக்கூடிய நிதி அபாயத்தையும் குறைக்க முடியும் என NETS தெரிவித்துள்ளது.

இதுதவிர, நவம்பர் மாத இறுதிக்குள் NETS App செயலியில் Mini Programme வசதியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் பங்கேற்கும் வணிக நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு, ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனியாகச் செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

ஒரே NETS App செயலியின் வழியாகவே சம்பந்தப்பட்ட வணிகச் சேவைகளைப் பயனர்கள் அணுக முடியும்.

மொத்தத்தில், பணப்பரிவர்த்தனை வசதியைத் தாண்டி, அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு சேவைகளையும் ஒரே செயலியில் வழங்கும் நோக்கில் NETS நிறுவனம் தனது செயலியை மேம்படுத்தியுள்ளது.

இந்தப் புதிய மாற்றங்கள் சிங்கப்பூரில் வசிப்பவர்களுக்கும் வெளிநாட்டுப் பயணிகளுக்கும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேலும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.