லாவோஸ் நாட்டின் குகை ஒன்றில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக விபத்தில் சிக்கியிருந்த 7 பேரில் ஒரு நபர் மே 29ஆம் தேதி அன்று அனைத்துலக மீட்புக் குழுவினரால் பத்திரமாக உயிரோடு மீட்கப்பட்டுள்ளார்.
சேசொம்பௌன் மாநிலம் மலைப்பகுதியில் உள்ள குகைக்குள் தங்கம் தேடுவதற்காக சென்ற 7 பேர் கடந்த மே 20 ஆம் தேதி முதல் பலத்த மழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக வெளியேற முடியாமல் உள்ளே மாட்டிக்கொண்டனர்.
அவர்களை மீட்டும் பணியில் தாய்லாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த அனைத்துலக நிபுணத்துவ முக்குளிப்பாளர் குழுக்கள் தீவிரமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குகையின் நுழைவு வாயிலிருந்து கிட்டத்தட்ட 300 மீட்டர் தொலைவில் உள்ள குறுகிய உயரமான பகுதியில் 5 பேர் உயிருடன் இருப்பதே கடந்த புதன்கிழமை (மே 27) அன்று கண்டறியப்பட்டது.
உடல் முழுவதும் சேரும் சகதியுமாக காணப்பட்ட நிலையில் நெஞ்சுவலி மற்றும் கடுமையான பசியால் சோர்வு அடைந்தவர்களில் 1 நபர் மட்டும் தற்பொழுது மீட்கப்பட்டுள்ளார்.
குகைக்குள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினாலும், சேறு கலந்த தண்ணீர் உள்ளதாலும் நீருக்கடியில் எதையும் பார்க்க முடியாமல் மீட்பு குழுவினர் கடுமையான சவால்களை சந்தித்து வருகின்றனர்.
குகைக்குள் இருக்கும் மற்ற 4 பேரின் உடல் நிலையை ஆய்வு செய்து அவர்களையும் விரைவில் மீட்போம் எனவும், இன்னும் கண்டறியப்படாத 2 பேரை தேடும் பணியையும் அயராது தொடர்வோம் எனவும் தாய்லாந்து மீட்பு குழு உறுப்பினர் கெங்கார்ட் போங்கா வோங் தெரிவித்துள்ளார்.