சிங்கப்பூரில் கைப்பற்றப்பட்ட $2 மில்லியன் மதிப்புடையப் போதைப் பொருட்கள்...!! மலேசியர் மற்றும் சிங்கப்பூரர் கைது..!!
சிங்கப்பூரில் இன்று (மார்ச் 21) குடிநுழைவுச் சோதனை சாவடி ஆணையமானது (ICA) ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் சிங்கப்பூரில் போதைப் பொருள்களை நாடு கடத்த முயற்சிக்கும்போது $2 மில்லியனுக்கும் அதிக மதிப்புடைய போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
போதைப் பொருள்களை நாடு கடத்த முயன்றதற்காக சிங்கப்பூரர் ஒருவரையும், மலேசியர் ஒருவரையும் கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவங்கள் ஆனது இந்த வாரத்தில் சிங்கப்பூரில் இரண்டு வெவ்வேறு சோதனைச் சாவடிகளில் நடந்துள்ளது.
முதல் சம்பவமானது, மார்ச் 17 அன்று அதிகாலையில் துவாஸ் சோதனை சாவடியில் நடந்துள்ளது.அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மலேசியர் ஒருவரை சந்தேகத்தின் பெயரில் சோதனை செய்தனர்.
அதில் அவரது மோட்டார் சைக்கிளில் உள்ள பின்புறப் பெட்டியில் கருப்பு நிறத்தில் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இந்த சம்பவம் குறித்து மத்திய போதை பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர்கள் மேலும் சோதனை நடத்தி 25 போதைப் பொருள் பொட்டலங்களை கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட பொட்டலங்களில் மொத்தம் 14 கிலோ ஹெராயின், 2.6 கிலோ ஐஸ் மற்றும் 190 கிராம் எக்ஸ்டசி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டாவது சம்பவமானது மார்ச் 17 அன்று, 29 வயதுடைய நபர் ஒருவர் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனம் ஒன்றில் வந்து கொண்டிருந்த பொழுது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அந்த நபர் அவரது இடுப்பு பகுதிக்கு கீழே கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளான ஒரு பொட்டலத்தை மறைத்து வைத்திருந்ததாக ICA அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மேலும் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகள் சோதனை செய்ததில் சுமார் 89 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு சம்பவங்களிலும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பானது $2 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.