சிங்கப்பூரில் தேசிய தினப் பேரணி..!! ஆங் மோ கியோவில் நாளை முக்கிய சாலைகள் மூடல்.!!

சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டுக்கான தேசிய தினப் பேரணி (National Day Rally) நாளை, ஆகஸ்ட் 23ஆம் தேதி, ஆங் மோ கியோவில் உள்ள ITE College Central-ல் நடைபெற உள்ளது. பிரதமர் லாரன்ஸ் வோங் இந்த ஆண்டுக்கான தேசிய தினப் பேரணி உரையை அங்கு நிகழ்த்த உள்ளார்.
இந்நிகழ்வை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பையும், போக்குவரத்து சீராக நடைபெறுவதையும் உறுதி செய்யும் வகையில், ஆங் மோ கியோ பகுதியில் சில முக்கிய சாலைகள் மற்றும் சாலைப் பாதைகள் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் நாளை அதிகாலை 5.00 மணி முதல் இரவு 11.59 மணி வரை அமலில் இருக்கும்.
முக்கியமாக Ang Mo Kio Drive முழுமையாக வாகனப் போக்குவரத்துக்கு மூடப்படும். அதேபோல், Ang Mo Kio Avenue 5-ல் இருந்து Ang Mo Kio Drive-க்கு செல்லும் இணைப்புச் சாலையும், Ang Mo Kio Drive-ல் இருந்து Ang Mo Kio Avenue 5-க்கு செல்லும் இணைப்புச் சாலையும் மூடப்படும்.
மேலும், Ang Mo Kio Avenue 5-ல் CTE நோக்கிச் செல்லும் குறிப்பிட்ட பகுதிகளில் இடதுபுறப் பாதைகளும், Ang Mo Kio Avenue 8 நோக்கிச் செல்லும் பகுதியில் வலதுபுறப் பாதையும் தற்காலிகமாக மூடப்படும்.
சாலை மூடப்பட்டிருக்கும் நேரத்தில் அப்பகுதிக்குள் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள், காவல்துறை மற்றும் அவசர சேவை வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டவும் காவல்துறை அதிகாரிகள், (Auxiliary Police Officers) மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சாலை மூடலால் ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க, பொதுமக்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மூடப்பட்ட சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சட்டவிரோதமாக நிறுத்தப்படும் அல்லது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகனங்கள் அகற்றப்படலாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.
2026 தேசிய தினப் பேரணி உரையை பிரதமர் லாரன்ஸ் வோங் நாளை மாலை 6.45 மணிக்கு தொடங்க உள்ளார். முதலில் மலாய் மொழியிலும், தொடர்ந்து மாண்டரின் மொழியிலும் உரையாற்றுவார். பின்னர் இரவு 8.00 மணிக்கு ஆங்கில உரை இடம்பெறும்.
தேசிய தினப் பேரணி சிங்கப்பூரின் முக்கியமான வருடாந்திர அரசியல் நிகழ்வுகளில் ஒன்றாகும். இதில் பிரதமர் நாட்டின் முன்னேற்றம், அரசின் எதிர்காலத் திட்டங்கள், மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் மற்றும் வரவிருக்கும் கொள்கை நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் உரையாற்றுவார்.
எனவே, நாளை ஆங் மோ கியோ மற்றும் ITE College Central சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயணம் செய்யும் பொதுமக்கள், குறிப்பாக வாகன ஓட்டிகள், சாலை மூடல்களை கருத்தில் கொண்டு தங்களது பயண நேரத்தை முன்கூட்டியே திட்டமிடுவது மிகவும் அவசியம்.
தேசிய தினப் பேரணி சுமூகமாக நடைபெறுவதற்கான இந்த போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
