சிங்கப்பூரில் பிப்ரவரி 2 முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தொழில்முறை ஓட்டுநர்களுக்கு வசதியாக, மருத்துவ பரிசோதனை நடைமுறை பிப்ரவரி 2 முதல் எளிமைப்படுத்தப்பட உள்ளது. இதனை போக்குவரத்து காவல்துறையும் நிலப் போக்குவரத்து ஆணையமும் இணைந்து அறிவித்துள்ளன.
தற்போதைய நடைமுறையின் கீழ், 65 வயதுக்கு மேற்பட்ட தொழில்முறை உரிமம் பெற்ற ஓட்டுநர்கள் சில நேரங்களில் ஒரே ஆண்டில் இரண்டு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறை மற்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் தனித்தனியாக மருத்துவ பரிசோதனை அறிவிப்புகளை அனுப்புவதால், ஓட்டுநர்களுக்கு குழப்பமும் கூடுதல் சிரமமும் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், இனி 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தொழில்முறை ஓட்டுநர்கள் ஒரே மருத்துவ பரிசோதனை அறிவிப்பை மட்டுமே பெறுவார்கள். அந்த அறிவிப்பைப் பெற்ற பிறகு, அவர்கள் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எந்த மருத்துவரிடமும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம்.
மருத்துவர், ஓட்டுநர் வாகனம் ஓட்டத் தகுதியுடையவரா என்பதை உறுதி செய்து, புதிய ஒருங்கிணைந்த மருத்துவ பரிசோதனை அறிக்கையை நேரடியாக போக்குவரத்து காவல்துறை மற்றும் நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் சமர்ப்பிப்பார். இதன் மூலம், ஓட்டுநர்கள் மருத்துவ அறிக்கைகளை ஸ்கேன் செய்து ஆன்லைனில் பதிவேற்ற வேண்டிய அவசியம் இனி இருக்காது.பரிசோதனை முடிந்ததும், ஓட்டுநர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் உறுதிப்படுத்தல் அனுப்பப்படும்.
மேலும், 50 முதல் 64 வயதுக்குள் உள்ள தொழில்முறை உரிமம் பெற்ற ஓட்டுநர்களுக்கும் இந்த புதிய நடைமுறை பொருந்தும். இவர்கள் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டிய நிலையில், இனி மருத்துவ அறிக்கைகளை தனியாக பதிவேற்ற தேவையில்லை. மருத்துவர்கள் நேரடியாக நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் அறிக்கைகளை சமர்ப்பிப்பார்கள்.
இந்த புதிய நடைமுறை மூலம், வயதான தொழில்முறை ஓட்டுநர்களின் நிர்வாகச் சுமை குறையும் என்றும், மருத்துவ பரிசோதனை செயல்முறை மேலும் எளிதாகவும் சீராகவும் நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.