சிங்கப்பூரின் கே.கே மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு கிடைத்த அங்கீகாரம்..!!!

சிங்கப்பூரின் கே.கே மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு கிடைத்த அங்கீகாரம்..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தேசிய பாரம்பரிய வாரியம் (NHB), பழைய கே.கே. மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் மூன்று கட்டிடங்களை (தொகுதி 1 முதல் 3 வரை) சிங்கப்பூரின் 76வது தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்க முன்மொழிந்துள்ளது.

தற்போது நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமையகமாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த கட்டிடங்கள் 1930கள் மற்றும் 1950களுக்கு இடையில் கட்டப்பட்டவை. இவை சிங்கப்பூரில் தாய்வழி மற்றும் மகளிர் சுகாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றிய முன்னாள் கே.கே மருத்துவமனையின் அடையாளங்களாக கருதப்படுகின்றன.

1858 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சிங்கப்பூரின் ஐந்தாவது பொது மருத்துவமனையாக துவங்கிய கே.கே, ஆரம்பத்தில் பால்வினை மற்றும் தொற்றுநோய் சிகிச்சையில் கவனம் செலுத்தியது. பின்னர் 1868 முதல் மகளிர் நோய்களுக்கும் சிகிச்சை வழங்கத் தொடங்கியது. 1924ஆம் ஆண்டு இலவச மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ மையமாக மாற்றப்பட்டதும், தாய்வழி மற்றும் குழந்தை சுகாதார வளர்ச்சிக்கு புதிய அடித்தளமாக அமைந்தது.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, கே.கே மருத்துவமனை சிங்கப்பூரின் முன்னணி மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவமனையாக விளங்கியது. 1952 முதல் 1978 வரை சிங்கப்பூரின் முதல் மகப்பேறு மருத்துவப் பள்ளி இங்கு இயங்கி, உள்ளூர் மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்கி, தாய்மரணம் மற்றும் குழந்தை மரண விகிதங்களை கணிசமாகக் குறைத்தது.

1966ஆம் ஆண்டு மட்டும் 39,835 குழந்தைகள் இங்கு பிறந்தன.இது அந்த ஆண்டு சிங்கப்பூரில் நடந்த மொத்தப் பிறப்புகளில் 85% ஆகும். 1924 முதல் 1997இல் மருத்துவமனை மாற்றப்பட்டு மூடப்படும் வரை, மொத்தம் 1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு பிறந்தனர்.

இந்தக் கட்டிடங்கள் சிங்கப்பூரின் ஆரம்பகால தேசக் கட்டுமானத்தில் சுகாதார துறையின் பங்களிப்பை நினைவூட்டும் வகையில், தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்படுவது, நாட்டின் வரலாற்றுச் சிறப்பை வெளிப்படுத்தும் ஒரு அஞ்சலியாகக் கருதப்படுகிறது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan