போக்குவரத்து சிக்னலில் பயங்கர விபத்து..!! லாரி மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்..!!
சிங்கப்பூர்: போக்குவரத்து விளக்கு சிவப்பு நிறமாக மாறிய பிறகும் வேகத்தைக் குறைக்க தவறிய லாரி ஒன்று, தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது நேராக மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
சாலை விபத்துக்கள் குறித்து ஆவணப்படுத்தும் Facebook பக்கமான SGRV இந்த விபத்து குறித்த காணொளியைப் பகிர்ந்துள்ளது.
அந்த காணொளியில் போக்குவரத்து விளக்கு படிப்படியாக பச்சையில் இருந்து மஞ்சளுக்கும் பின்னர் சிவப்பிற்கும் மாறுவது தெரிகிறது. இதனால் ஒரு மோட்டார் சைக்கிள் வேகம் குறைத்து வெள்ளை கோட்டிற்கு முன்பாக நின்று கொண்டிருக்கிறது.
மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் வந்த ஒரு வெள்ளை நிற டிரக் வேகத்தைக் குறைக்காமல் அதன் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
காணொளியில் ஓட்டுநர் எழுந்து நிற்க முயற்சிப்பதும், பின்னர் அவருக்கு ஏற்பட்ட காயங்களால் நிற்க முடியாமல் மீண்டும் குனிந்து அமர்வதையும் காண முடிகிறது.
ஜூன் 25ஆம் தேதி அன்று காலை சுமார் 7:30 மணி அளவில் புக்கிட் படோக் சாலையில் இருந்து சோவா சு காங் சாலையை நோக்கிச் செல்லும் வழியில் உள்ள போக்குவரத்து சிக்னலில் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கும் சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கும் (SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டு, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சம்பவ இடத்தில் காயமடைந்து சுயநினைவுடன் இருந்த 36 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், 59 வயதான லாரி ஓட்டுநர் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.