வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிம்மதி… குறைந்த செலவில் வசதியான தங்குமிடம்!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மனிதவள அமைச்சகத்தால் கட்டப்பட்ட முதல் பிரத்யேக தங்குமிடம் 17.01.26 அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
ஜூரோங் வெஸ்டின் இன்னோவேஷன் லேனில் அமைந்துள்ள இந்த NESST துலாங் தங்குமிடத்தில் மொத்தம் 210 அறைகள் உள்ளன. இதில் சுமார் 2,400 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய தங்குமிடம் விசாலமான அறைகள், மேம்பட்ட சுகாதார வசதிகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்வுச் சூழலை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையிலும் அதிகபட்சமாக 12 பேர் வரை தங்கலாம். ஒருவருக்கு குறைந்தபட்சமாக 3.6 சதுர மீட்டர் வாழ்க்கைப் பரப்பளவு வழங்கப்படுவதுடன், அறைகளில் போதுமான கழிப்பறை மற்றும் தனிமைப்படுத்தும் வசதிகளும் உள்ளன.
தற்போது 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்கள் இந்த தங்குமிடத்தில் தங்குவதை உறுதிப்படுத்தியுள்ளன. முன்பதிவு விகிதம் ஏற்கனவே கிட்டத்தட்ட 100 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டு மே மாத இறுதிக்குள் தொழிலாளர்கள் படிப்படியாக இங்கு குடியேறவுள்ளனர்.
மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தங்குமிடங்களில் பொது சுகாதாரத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், மனிதவள அமைச்சகம் புதிய மானியத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் நிர்ணயிக்கப்பட்ட இடைக்கால தரநிலைகளைப் பூர்த்தி செய்ய, சுமார் 900 தங்குமிடங்களைப் புதுப்பிக்க இந்த மானியங்கள் வழங்கப்படுகின்றன.
மேலும் திட்டத்தின் தன்மையைப் பொறுத்து, புதுப்பிப்பு பணிகளுக்கான மானியத் தொகை S$3,000 முதல் S$8,800 வரை இருக்கும். 2028 இறுதிக்குள் புதுப்பிப்புகளை நிறைவு செய்யும் தங்குமிட ஆபரேட்டர்களுக்கு கூடுதல் ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இந்த நடவடிக்கைகள், தொழிலாளர் தங்குமிடங்களில் தரத்தை உயர்த்தி, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களை சமாளிக்க உதவும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.