வேக வரம்பை மீறிய 8 கனரக வாகன ஓட்டுநர்கள்..! அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட சிங்கப்பூர் காவல்துறை!
சிங்கப்பூரில் வேக வரம்பை மீறி கனரக வாகனங்களை இயக்கியதாக, 30 முதல் 55 வயதுக்குட்பட்ட 8 ஓட்டுநர்கள் மீது நாளை (ஜூலை 28) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது.
போலீசார் வெளியிட்ட தகவலின்படி, இந்தச் சம்பவங்கள் 2025 டிசம்பர் முதல் 2026 மே மாதம் வரை நடைபெற்றுள்ளன.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஓட்டிய பேருந்துகள், சிமெண்ட் கலவை லாரிகள் (Cement Mixers) மற்றும் சரக்கு லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டு கருவி (Speed Limiter) பொருத்தப்படாத நிலையில், நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை மீறி இயக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூர் போக்குவரத்து போலீசார், குறிப்பாக கனரக வாகனங்கள் வேக வரம்பை மீறி இயக்கப்படுவதை மிகவும் தீவிரமான குற்றமாகக் கருதுவதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வகை வாகனங்கள் விபத்தில் சிக்கினால், உயிரிழப்பும் கடுமையான சேதமும் ஏற்படும் அபாயம் அதிகம் என்பதால், இதுபோன்ற விதிமீறல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை தொடரும் என்றும் எச்சரித்துள்ளனர்.
இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதல் முறையாக குற்றம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக S$1,000 அபராதம், 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மீண்டும் அதே குற்றத்தைச் செய்தால் அதிகபட்சமாக S$2,000 அபராதம், 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் அனைத்து வகை வாகனங்களையும் ஓட்டுவதற்கான தகுதி நீக்கமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.