சிங்கப்பூரில் விபத்தில் சிக்கிய மியான்மர் பெண்..! சிகிச்சையை தொடர தாயகம் திரும்பிய சோகம்!
சிங்கப்பூரின் செம்பவாங் பகுதியில் கடந்த ஜூலை 23 அன்று நடைபெற்ற சாலை விபத்தில் பலத்த காயமடைந்த 35 வயதுடைய மியான்மர் பெண், மேலதிக சிகிச்சைக்காக தனது சொந்த நாடான மியான்மருக்கு திரும்பியுள்ளார்.
சிங்கப்பூரில் அறுவை சிகிச்சைக்கான அதிக செலவை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டதால் இந்த முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் நடந்தபோது, வெலிங்டன் சர்க்கிள் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற அவர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் நகராது என நினைத்து நடந்து சென்றதாக கூறியுள்ளார்.
ஆனால் எதிர்பாராத விதமாக அந்த கார் திடீரென திரும்பியதால், அவரது வலது காலின் மீது ஏறிச் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் அவரது கால் கார் சக்கரத்திற்கும் உடல் அமைப்பிற்கும் இடையில் சிக்கிக்கொண்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) வீரர்கள், ஹைட்ராலிக் மீட்புக் கருவிகளின் உதவியுடன் அவரது காலை மீட்டு, பின்னர் அவரை சுயநினைவுடன் Khoo Teck Puat Hospital மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அவரது வலது காலில் இரண்டு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.
மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், ஜூலை 25 அன்று இரவு மியான்மருக்கு புறப்பட்டார். இந்த விபத்து தொடர்பாக 39 வயது ஆண் கார் ஓட்டுநரிடம் சிங்கப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.