திடீரென ரத்தான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!!
2025 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதுகளுக்கான எழுத்தாளர்களின் பட்டியல்களை தேர்வு குழுக்கள் தேர்ந்தெடுத்து பரிந்துரைத்தது. பிறகு சாகித்ய அகாடமி தேசிய நிர்வாக குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் இதில் 24 மொழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்களுடைய பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டதாக தெரியவந்தது.
இந்தியாவில் 24 மொழிகளில் சிறந்த கவிதை, நாவல், இலக்கிய ஆய்வுகள், சிறுகதை ஆகிய பிரிவுகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
நிர்வாக குழு கூட்டம் நடைபெற்ற பிறகு நேற்று மாலை சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட இருந்த நிலையில் திடீரென விருதுகள் அறிவிப்பை வெளியிட தவிர்த்துள்ளனர்.
இதனால் எழுத்தாளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் தேசிய நிர்வாக குழு கூட்டத்தில் பெயர் பட்டியல் பரிந்துரை செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக ஒப்புதலும் வழங்கப்பட்ட நிலையில் விருதுகளை அறிவிக்காமல் காலதாமதம் ஏற்படுத்துவது சரியல்ல என்று அதிருப்தி தெரிவித்துள்ளதாக கருத்துக்கள் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து விருதுகள் அறிவிப்பதற்கான செய்தியாளர்கள் சந்திப்பையும் சாகித்திய அகாடமி நிர்வாகத்தினர் ரத்து செய்துள்ளனர்.