சிங்கப்பூர் போக்குவரத்து அப்டேட்: LRT சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்..!!
சிங்கப்பூர் : செங்காங் – புங்கோல் இலகுரக ரயில் (LRT) விரிவாக்க பணிகளின் காரணமாக செங்காங் மேற்கு LRT வழித்தடத்தில் செங் லிம் நிலையம் நோக்கிய ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அறிவித்துள்ளது.
ஏப்ரல் 19 முதல் அக்டோபர் 18 வரை இந்த சேவைகள் நிறுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு LTA பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு வார நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகளை ஏற்றி செல்வதற்கு மாற்று பேருந்துகள் ஏற்பாடு செய்ய உள்ளதாக நேற்று (ஏப்ரல் 6 ) முகநூலில் நிலப் போக்குவரத்து ஆணையம் பதிவிட்டிருந்தது.
ஒவ்வொரு 3 முதல் 5 நிமிடங்களுக்கு ஒரு மாற்று பேருந்து வரும் எனவும் அதில் குறிப்பிட்டு இருந்தது.
மாற்று பேருந்து விவரங்கள் : 👉🏻ஷட்டில் பேருந்து A : காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை, ஃபெர்ன்வேல், லாயர், டோங்காங் மற்றும் ரென்ஜோங் வழியாக சென்று இறுதியாக செங்காங் பேருந்து நிலையம் வந்தடையும்.
👉🏻ஷட்டில் பேருந்து B : மாலை 5:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை இயக்கப்படும். இந்த பேருந்து செங்காங் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு, செங் லிம், ஃபார்ம்வே, குபாங் மற்றும் தாங்கம் வழியாக செல்லும்.
இந்த புதிய பயண வழித்தடங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், மாற்றுப் பேருந்து சேவை திட்டமிடுவதற்கு முன்பாக ஏப்ரல் 13 முதல் தொடங்கப்பட உள்ளது. LRT சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை இந்த பேருந்துகள் இயக்கப்படும்.
பொதுமக்கள் SimplyGo செயலி மூலம்”Travel Smart Journeys” – க்காக் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் காலை 7:30 மணிக்கு முன்பு அல்லது காலை 9:00 மணியில் இருந்து 9:45 மணிக்குள் “A” ஷட்டில் பேருந்தில் பயணம் செய்தால் , கட்டணங்களில் தள்ளுபடி பெறலாம் என்றும் LTA அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மாற்றுப் பேருந்து மட்டுமில்லாமல், வழக்கமான இலகு ரயில் அல்லது பேருந்து சேவைகள் போன்ற பிற போக்குவரத்து முறைகளையும் பொதுமக்கள் தேர்வு செய்து பயணம் செய்து கொள்ளலாம்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இடையே பயணிக்கும் பொது மக்கள், வழக்கமான பேருந்து சேவைகளுக்காக 374, 163, 50 மற்றும் 102 ஆகிய பேருந்து வழித்தடங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.