சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இன்று (30.12.25) வேகமாக வாகனம் ஓட்டியதற்காக,வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்படாத ஆறு கனரக வாகன ஓட்டுநர்கள் மீது போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை, அவர்கள் பேருந்துகள், கான்கிரீட் லாரிகள் மற்றும் லாரிகளில் அதிவேகமாக ஓட்டியபோது பிடிபட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல், 2018 ஜனவரி 1க்கு முன் பதிவு செய்யப்பட்ட 3,501 கிலோ முதல் 12,000 கிலோ வரை அதிகபட்ச சுமை திறன் கொண்ட அனைத்து லாரிகளிலும் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (26.12.25) நிலவரப்படி, சிங்கப்பூரில் இன்னும் 345 லாரிகளில் இந்த கருவிகள் பொருத்தப்படவில்லை என்றும்,இது மொத்த லாரிகளில் சுமார் 14% இருக்கும் என்றும் காவல்துறை கூறியுள்ளது.
வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை இன்னும் பொருத்தாத லாரி உரிமையாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.ஜனவரி 1 முதல் விதிமீறல்களை போக்குவரத்து காவல்துறை கடுமையாகக் கண்காணிக்கும்.விதிமீறினால் உரிமையாளர்கள் மீது வழக்குத் தொடரப்படுவதுடன்,லாரிகள் சாலையில் இயக்க தடை விதிக்கப்படலாம்.மேலும் சாலை வரி புதுப்பிக்கப்படாமலும் இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.