சிங்கப்பூரில் நடந்த சட்ட விரோத சிம்கார்டு வியாபாரம்..!! பின்னணி என்ன..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் குற்றவியல் கும்பல்களுக்கு போஸ்ட்பெய்டு சிம் கார்டுகளை சட்டவிரோதமாக பதிவு செய்ததாக 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் 17 பேர் விசாரணைக்கு உதவி வருகின்றனர்.
ஜனவரி 8 முதல் 16 வரை, மோசடி தடுப்புக் குழு ஏழு காவல் பிரிவுகளுடன் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டுகள் மோசடி மற்றும் பிற குற்றச் செயல்களில் பயன்படுத்தப்படுவதுடன், குற்றவியல் கும்பல்களுக்கு லாபத்திற்காக ஒப்படைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 16 முதல் 38 வயதுக்குட்பட்ட 22 ஆண்கள் மற்றும் 13 பெண்கள் அடங்குவர்.
விசாரணையில் ஒவ்வொரு சிம் கார்டுக்கும் அவர்கள் $15–$20 வரை வசூலித்ததாக தெரியவந்துள்ளது. மேலும் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து சிம் கார்டுகளை வாங்கி, 30–69 சிம் கார்டுகளை குற்றவியல் கும்பல்களுக்கு வழங்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல்துறை தெரிவிப்பின்படி, குற்றவியல் கும்பல்கள் மோசடி, சட்டவிரோத கடன் வழங்கல், விபச்சாரம் போன்ற சட்டவிரோத செயல்களில் உள்ளூர் சிம் கார்டுகளை அடிக்கடி பயன்படுத்துகின்றன. தெரிந்தே சிம் கார்டை குற்றச் செயலுக்காக வேறொருவருக்கு வழங்குபவர்களுக்கு $10,000 வரை அபராதம், மூன்று ஆண்டுவரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.