சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சமீபத்தில் ஆன்லைனில் வெளியாகியுள்ள டேஷ்கேம் வீடியோ ஒன்று, கல்லாங்–பாயா லெபார் எக்ஸ்பிரஸ்வே (KPE) சுரங்கப்பாதைக்குள் நடந்த ஒரு போக்குவரத்து தகராறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
வீடியோவில், போக்குவரத்து சீராக நகர்ந்துகொண்டிருந்த நிலையில், இடது பாதையில் சென்ற வெள்ளை நிற செடானை ஒரு மோட்டார் சைக்கிள் நெருங்குகிறது. பாதை இடப்பிரச்சினையால், இரு வாகனங்களும் மோதியதாகத் தெரிகிறது.
இதனால் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் விழுந்தார். ஓட்டுநர் இல்லாமல் மோட்டார் சைக்கிள் சில நொடிகள் இடது–வலதாக சறுக்கிச் சென்றது. இது சுரங்கப்பாதையில் பயணித்தவர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் மெரினா எக்ஸ்பிரஸ்வே (MCE) நோக்கிச் சென்ற KPE பகுதியில், 24 ஆம் தேதி காலை 11.40 மணியளவில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் இடையே நடந்து விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதில் காயமடைந்த 35 வயதுடைய ஆண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 34 வயதுடைய கார் ஓட்டுநர் விசாரணையில் போலீசாருக்கு ஒத்துழைத்து வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.