3 வயது சிறுவனை தரையில் தள்ளி அறைந்த ஆசிரியர்..!!சிங்கப்பூர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

3 வயது சிறுவனை தரையில் தள்ளி அறைந்த ஆசிரியர்..!!சிங்கப்பூர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

சிங்கப்பூரில் பாலர் பள்ளி ஒன்றில் 3 வயது சிறுவனைத் தரையில் தள்ளி, கன்னத்தில் அறைந்து கொடுமைப்படுத்திய 31 வயது முன்னாள் பெண் ஆசிரியருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 5 மாத சிறைத் தண்டனையை விதித்துள்ளது.

நீதிமன்றக் கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளி மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெயர் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.


கடந்த வருடம் (2025) செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி அன்று காலையில் இச்சம்பவம் ஆனது நிகழ்ந்துள்ளது.

வகுப்பறைக்கு வெளியே அழுது கொண்டிருந்த சிறுவனை அந்த ஆசிரியர் அவனது மணிக்கட்டை பிடித்து இழுத்து வந்து வகுப்பறைக்குள் தரையில் வீசி உள்ளார்.

சிறுவன் பயத்தில் ஆசிரியரின் காலில் தட்டிய போது கோபமடைந்து அவர் சிறுவனின் கையில் பலமாக அடித்துள்ளார்.

சத்தம் கேட்டு மற்ற ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வருவதைக் கண்ட அந்த ஆசிரியர் வகுப்பறை கதவை மூடி, சிறுவனின் கன்னத்தில் இருமுறை பலமாக அறைந்துள்ளார். அந்த தாக்குதலின் வேகத்தில் சிறுவனின் தலை அருகில் இருந்த அலமாரியில் மோதியுள்ளது.

வகுப்பறையில் ஏற்பட்ட கூச்சலைக் கேட்டு அங்கு வந்த பள்ளி முதல்வர் சிறுவனை மீட்டு அவனது தாயாருக்கு இது குறித்து உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர்.

பெற்றோரிடம் எதையும் சொல்லக்கூடாது என ஆசிரியர் மிரட்டியதால் அச்சிறுவன் முதலில் உண்மையை சொல்ல பயந்துள்ளான். பின்னர் அவனது தாய் விசாரித்த போது, நடந்ததை கூறவே அன்றைய தினமே காவல்துறையில் அந்த ஆசிரியர் மீது புகார் அளிக்கப்பட்டது.

பள்ளியின் கண்காணிப்புக் கேமரா பதிவுகளைக் காட்டிய பிறகும் தான் சிறுவனை அடிக்கவில்லை எனவும், அவனது தலையைத் தொட்டு மட்டுமே பார்த்ததாக அந்த ஆசிரியர் தொடர்ந்து பொய் கூறி நடந்த விஷயத்தை மறைக்க முயன்றுள்ளார்.

 

தற்போது, குழந்தையைக் கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட அந்தப் பெண்ணுக்கு, 5 மாத சிறை தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இத்தகைய குற்றங்களுக்கு அதிகபட்சமாக 8 ஆண்டுகள் வரை சிறை அல்லது $8,000 அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் அந்த ஆசிரியர் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு $15,000 இழப்பீடாக வழங்கியுள்ளார்.