சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வரி சீசனை பயன்படுத்தி சில குற்றவாளிகள், சிங்கப்பூரின் உள்நாட்டு வருவாய் ஆணையம் (IRAS) என ஆள்மாறாட்டம் செய்து, வரி செலுத்துவோருக்கு போலி மின்னஞ்சல்கள் அனுப்பி வருவதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மின்னஞ்சல்களில், வரி திரும்பப் பெறத் தகுதியுள்ளதாகக் கூறி, விண்ணப்பத்தைச் செயல்படுத்த ஒரு இணைப்பைக் கிளிக் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அந்த இணைப்பை கிளிக் செய்தவுடன், பாதிக்கப்பட்டவர்கள் போலியான Singpass சரிபார்ப்புப் பக்கத்திற்கு மாற்றப்படுகிறார்கள். அங்கு அடையாள அட்டை எண், Singpass உள்நுழைவு விவரங்கள், வங்கி கணக்கு அல்லது வங்கி அட்டைத் தகவல்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை உள்ளிடுமாறு கேட்கப்படுகிறது.பலர், IRAS-ஐ நேரடியாக தொடர்பு கொண்ட பின்னரே தாங்கள் மோசடிக்கு உள்ளானதை உணர்கிறார்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
IRAS, வரி திரும்பப் பெறுவதற்காக மின்னஞ்சல் மூலம் வங்கி அல்லது அட்டை விவரங்களை ஒருபோதும் கேட்காது என்றும், கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் வழியாக பணம் திரும்ப வழங்கப்படாது என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். அனைத்து வரித் திரும்பப் பெறுதல்களும் தானாகவே வரி செலுத்துவோரின் வங்கிக் கணக்கு அல்லது IRAS-ல் பதிவு செய்யப்பட்ட PayNow கணக்கில் செலுத்தப்படும்.