சிங்கப்பூரில் 25 வயது இளைஞர் மீது சட்ட நடவடிக்கை..! காரணம்..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 25 வயது இளைஞர் ஒருவர், மற்ற சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பை பொருட்படுத்தாமல் இரவில் போக்குவரத்துக்கு எதிராக வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் விசாரணை நடத்தி அவரது அடையாளத்தை உறுதி செய்ததுடன், அவர் மீது நாளை(25.02.26) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது.
காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி அதிகாலை 12:50 மணியளவில் பார்ட்லி சாலையில் கிழக்கு நோக்கி டாம்பனிஸ் அவென்யூ 10 திசையில் ஒரு கருப்பு நிற செடான் கார் தவறான திசையில் சென்றதாக தகவல் கிடைத்தது.
அந்த தகவல் கிடைக்கும் போது, சம்பந்தப்பட்ட வாகனம் ஏற்கனவே அங்கிருந்து வெளியேறியிருந்தது. பின்னர் போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட விசாரணை மற்றும் சாலை கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன் ஓட்டுநரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டை எதிர்கொள்ள நீதிமன்றத்தில் ஆஜராக்கப்படுகிறார்.
1961ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 64(1)ன் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக S$5,000 அபராதம், 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மீண்டும் குற்றம் செய்தவர்களுக்கு S$10,000 அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மேலும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.
மற்ற சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்கும் எந்தவொரு ஆபத்தான ஓட்டுநர் நடத்தையும் கடுமையாக எதிர்கொள்ளப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொண்டால், ஓட்டுநர்கள் பாதுகாப்பான தூரத்தை கடைப்பிடித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.