மருத்துவ உலகை வியக்க வைக்கும் நாய்களின் திறன்..!! ஆச்சரியப்பட வைக்கும் ஆய்வு..!!
வீட்டை காவல் காப்பதிலும் ஆபத்து காலங்களில் மனிதர்களை காப்பதிலும் நாய்களை விஞ்சிய நண்பன் யாருமில்லை என்பது மிக நிதர்சனமான உண்மை.
இப்போது அவை ஒரு படி மேலே போய் மனித குலத்தின் ஆகப்பெறும் எதிரியான புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே மோப்பம் பிடித்து காட்ட தயாராகி விட்டன.
இந்த ஆய்வு எங்கு தொடங்கியுள்ளது? பெங்களூருவைச் சேர்ந்த ‘டாக்னோ சிஸ்’ என்ற புதிய தலைமுறை ஸ்டார்ட் அப் நிறுவனம் நாய்களின் அபாரமான மோப்ப சத்தியையும் நவீன செயற்கை நுண்ணறிவையும் இணைத்து ஒரு மருத்துவப் புரட்சி செய்து வருகிறது.
நமக்கும் நாய் உலகிற்கும் உள்ள வித்தியாசத்தை அறிவியல் பூர்வமாக பார்த்தால் சற்று அதிசயமாக இருக்கும். மனிதர்களுக்கு மூக்கில் இருக்கும் மோப்ப உணர்வு செல்களின் எண்ணிக்கை வெறும் 50 லட்சம் தான். ஆனால் நாய்களுக்கும் அது 30 கோடியாகும்.
மனித உடலுக்குள் புற்றுநோய் செல்கள் வளர தொடங்கும் போது நம் மூச்சுக்காற்றில் மிக நுண்ணிய வேதிப்பொருள் மாற்றங்கள் ஏற்படும் சாதாரண மனிதர்களால் இதை கற்பனை கூட செய்ய முடியாது. ஆனால் பயிற்சி பெற்ற நாய்கள் நோயாளிகளின் மூச்சு மாதிரிகளை ஒரே ஒரு முறை மோப்பம் பிடித்து ஆரம்ப அறிகுறியில் இருக்கும் புற்றுநோயை மிகவும் துல்லியமாக கண்டறிந்து விடும்.
இந்த சோதனை முறையில் மனிதர்களின் மூச்சு மாதிரிகள் அடங்கிய கொள்கலன்கள் ஆய்வகத்தில் வரிசையாக வைக்கப்படுகின்றன. அங்கு சிறப்பு பயிற்சி பெற்ற நாய்கள் ஒவ்வொன்றாக வந்து அவற்றை மோப்பம் பிடிக்கின்றன புற்றுநோய் அறிகுறி உள்ள மாதிரியை கடக்கும் போது நாய்களின் உடல் அசைவிலும் நடத்தையிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன.
அங்கே பொருத்தப்பட்டுள்ள மோஷன் சென்சார்கள் நாய்களின் இந்த அசைவுகளை படம் பிடிக்கின்றன அதன் பிறகு பல நோயகள் தனித்தனியாக தரும் எதிர்வினைகளை செயற்கை நுண்ணறிவு அலசி ஆராய்ந்து இறுதி முடிவை நொடிகளில் துல்லியமாக அறிவிக்கிறது.
ஏற்கனவே உலக அளவில் கொரோனா மற்றும் பார்கின்சன் போன்ற நோய்களை நாய்கள் கண்டறியும் என்பது உலக அளவில் நிரூபிக்கப்பட்ட உண்மை என்றாலும் இந்தியாவில் இது போன்ற பெரிய முயற்சியில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும்.
இந்தியாவில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான நோயாளிகளின் மூச்சு மாதிரிகளை கொண்டு நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த நான்கு கால் மருத்துவர்களின் முடிவுகள் வியக்கத்தக்க வகையில் அதிக துல்லியத்தை காட்டியுள்ளன.
தற்போது இந்த நிறுவனம் மருத்துவமனைகளுடன் இணைந்து அடுத்த கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இறுதி இலக்கு: மிக எளிமையாக வீட்டில் இருந்தபடியே மூச்சு மாதிரியை பயன்படுத்தி புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் ஒரு கருவியை உருவாக்குவது ஆய்வாளர்களின் முயற்சியாகும்.
ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறிந்தால் 100% குணப்படுத்தி விடலாம் என்பதால் இந்த தொழில்நுட்பம் மருத்துவ உலகில் ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதமாக மாறும் என மருத்துவர்கள் எதிர்பார்க்கின்றனர்.