தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் புதிய மாற்றம்..!! இன்று முதல்..!!
தமிழகத்தில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் 125 நாள் வேலை உறுதித் திட்டம் (VB-G RAM-G) அமல்படுத்தப்பட்டுள்ளது.
125 நாட்களாக உயர்வு: இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புற குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வேலை உத்தரவாதம் 100 நாட்களில் இருந்து தற்போது 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தகுதியான ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 125 நாட்கள் கூலி வேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு: வேலைக்கு வருபவர்களின் வருகை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும். பணிகள் அனைத்தும் ஜியோ டேக்கிங் மற்றும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிக்கப்படும். செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் திட்டமிடல் கண்காணிப்பு தணிக்கை மற்றும் முறைகேடு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன? கிராமப்புற ஏழை மக்களுக்கு தொடர்ச்சியான வேலைவாய்ப்பை வழங்குவதுடன், நீர்நிலைகள் சீரமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், மண் பாதுகாப்புப் பணிகள், கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதாகும்.
15 நாட்களுக்குள் கூலி – நிலுவைத்தொகை இழப்பீடு உள்ளதா? இந்தத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் பணிகளுக்கான கூலி, வேலை முடிந்த பின்னர் விரைவாக வழங்கப்படும். மேலும், 15 நாட்களுக்குள் கூலி வழங்கப்படாவிட்டால், தாமத இழப்பீடு வழங்கும் நடைமுறையும் வழிகாட்டுதல்களில் இடம்பெற்றுள்ளது. அதாவது 16 வது நாளிலிருந்து நிலுவைத் தொகைக்கு நாள் ஒன்றுக்கு 0.05 % வீதம் இழப்பீடு வழங்கப்படும்.
திட்டம் சிறப்பாக செயல்படுவதற்காக மாநிலம், மாவட்டம் மற்றும் கிராம அளவிலான கண்காணிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம சபை மூலமாக முன்னுரிமைப் பணிகள் தேர்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்படும்.
யாரெல்லாம் இதற்கு தகுதி உடையவர்கள்? தனியாக வாழும் பெண்கள் மாற்றுத்திறனாளிகள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பழங்குடியினர் விடுதலையான கொத்தடிமை தொழிலாளர்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு சிறப்பு வேலை அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் வேலை பெறுவோரில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இருக்க வேண்டும்.
தனித்த பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்பை அதிகரிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தும், கிராம சபை ஒப்புதலுடன் கிராம பஞ்சாயத்து மேம்பாட்டு திட்டத்தை தயாரிக்க வேண்டும்.
125 நாள் வேலைத்திட்டம் கிராமப்புற குடும்பங்களின் வருமானத்தை உயர்த்துவதோடு, விவசாயம் இல்லாத காலங்களிலும் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.
அதே நேரத்தில், திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்பு தொடர்பாக அரசியல் விவாதங்களும் தொடர்ந்து நிலவி வருகின்றன.
கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்கவும் இந்த 125 நாள் வேலைத்திட்டம் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கு முக்கிய சிறப்பம்சம்: வேலை நடைபெறும் இடங்களில் குடிநீர் ஓய்வெடுக்க நிழல் வசதி முதலுதவி பெட்டி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
5 வயதிற்கு குறைவான குழந்தைகளுடன் பெண்கள் வேலைக்கு வந்தால் 5 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் அவர்களை கவனிப்பதற்காக ஒரு பெண் தொழிலாளி நியமிக்கப்பட்டு அவர்களுக்கு கூலியும் வழங்கப்படும்.
முக்கிய சலுகை: தொழிலாளர்கள் வசிக்கும் கிராமத்தில் இருந்து 5 கி.மீ சுற்றளவிற்குள் வேலை வழங்கப்படும். 5 கிலோ மீட்டருக்கு வெளியே வேலை வழங்கப்பட்டால் கூடுதலாக 10% கூலி வழங்கப்படும்.
இலவச மருத்துவ உதவி: மேலும் வேலை செய்யும்போது காயம் ஏற்பட்டால் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும். மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் சிகிச்சை மருந்து தங்குமிடம் மற்றும் உதவித்தொகையும் வழங்கப்படும்.
உயிரிழப்பு அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் அரசு அறிவிக்கும் காப்பீட்டு திட்டங்களின் கீழ் இழப்பீடு வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் நடைபெறும் அனைத்து பணிகளும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சமூக தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.
மத்திய மற்றும் மாநில அரசின் இணைப்பு திட்டம்: இந்தத் திட்டமானது மத்திய மற்றும் மாநில அரசுகளின் இணைத்திட்டமாக செயல்படுத்தப்படும் மொத்த செலவில் 60 விழுக்காடை மத்திய அரசும் 40 விழுக்காடை தமிழக அரசும் ஏற்கும்.
வேலை இழப்பு உதவித்தொகை மற்றும் கூலி தாமத இழப்பீட்டு தொகையை தமிழக அரசை வழங்கும்.