சிங்கப்பூரில் அடுத்தடுத்து கொள்ளை..! வெளிநாட்டவர் சிக்கியது எப்படி.??

சிங்கப்பூரில் அடுத்தடுத்து கொள்ளை..! வெளிநாட்டவர் சிக்கியது எப்படி.??

சிங்கப்பூருக்கு முதல் முறையாக வந்த சீனாவைச் சேர்ந்த 41 வயது ஆடவர், நாட்டின் செல்வச் செழிப்பைக் கண்டு கொள்ளையடித்து பணம் சம்பாதிக்கத் திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடு மற்றும் ஹோட்டல் அறைக்குள் அத்துமீறி நுழைந்து S$105,750 மதிப்பிலான பொருட்களைத் திருடிய அவருக்கு 3 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Huang Xiaozong என்ற அந்த ஆடவர், 2025 டிசம்பர் 5ஆம் தேதி முதன்முறையாக சிங்கப்பூர் வந்துள்ளார். அவர் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது, சிங்கப்பூர் “அழகாகவும் செல்வச் செழிப்பாகவும்” இருப்பதாக நினைத்ததுடன், திருட்டு மூலம் பணக்காரராக வேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, செல்வந்தர்கள் வசிக்கும் பகுதிகளில் வெளியில் இருந்து ஆட்கள் இல்லாதது போல் தெரியும் வீடுகளை அவர் நோட்டமிட்டுள்ளார். டிசம்பர் 6ஆம் தேதி சென்டோசாவுக்குச் சென்றபோது, Capella Singapore ஹோட்டலின் ஒரு அறையில் விளக்குகள் அணைக்கப்பட்டிருப்பதை கவனித்துள்ளார்.

அந்த அறையில் யாரும் இல்லை என நினைத்த அவர், பின்புற பால்கனியின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார். அங்கிருந்த கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நகைகள் உள்ளிட்ட பொருட்களைத் திருடியுள்ளார். அந்த நேரத்தில் அறையின் வழக்கமான விருந்தினர் வெளிநாட்டில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஹோட்டல் அறையிலிருந்து மட்டும் சுமார் S$58,000 மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டன. இதில் Chanel கைக்கடிகாரம், ஐந்து மோதிரங்கள் மற்றும் தங்கச் சங்கிலி உள்ளிட்டவை அடங்கும்.

டிசம்பர் 8ஆம் தேதி ஹோட்டல் ஊழியர்கள் அறையில் திருட்டு நடந்ததை கண்டறிந்தனர். தரையில் காலடித் தடங்களும், கண்ணாடிப் பெட்டி காலி செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

 

இதற்கிடையில், அந்த ஆடவர் செரங்கூன் பகுதியில் உள்ள ஒரு வீட்டையும் குறிவைத்துள்ளார். டிசம்பர் 7ஆம் தேதி இரவு சுமார் 8 மணியளவில், வீட்டின் உலோகக் கதவைத் தாண்டி உள்ளே நுழைந்துள்ளார்.

அங்கிருந்து சுமார் S$47,750 மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றுள்ளார். இரண்டு Tiffany திருமண மோதிரங்கள், வைரக் காதணிகள் மற்றும் தங்கச் சங்கிலி உள்ளிட்ட பொருட்கள் இதில் அடங்கும்.

வீட்டின் உரிமையாளர் அன்று இரவு வீடு திரும்பியபோது, படுக்கையறையில் இருந்த மேசை கலைந்து கிடந்ததையும் விலைமதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனதையும் கவனித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

 

அதே நாளில் மற்றொரு வீட்டிலும் அவர் அத்துமீறி நுழைந்துள்ளார். ஆனால் அப்போது அங்கு பணியில் இருந்த துப்புரவுப் பணியாளர் அவரைக் கவனித்து, என்ன செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

அந்த ஆடவர் சீன மொழியில் பதிலளித்துள்ளார். துப்புரவுப் பணியாளருக்கு அவர் கூறியது புரியாத நிலையில், அவர் அங்கிருந்து வேலியைத் தாண்டி தப்பிச் சென்றுள்ளார்.

டிசம்பர் 8ஆம் தேதி அவர் லிட்டில் இந்தியாவில் இருந்த ஹோட்டலில் இருந்து Kampong Bahru Road பகுதியில் உள்ள Harbour Ville Hotel-க்கு இடம் மாறியுள்ளார்.


அன்று மாலையே போலீசார் அந்த ஹோட்டலை அடைந்து அவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட S$105,750 மதிப்பிலான பொருட்களும் மீட்கப்பட்டன.

இரண்டு வீடு புகுந்து கொள்ளை குற்றச்சாட்டுகளை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். மேலும், மற்றொரு சட்டவிரோத அத்துமீறல் குற்றச்சாட்டும் தண்டனை விதிக்கும்போது கருத்தில் கொள்ளப்பட்டது.

வீடு புகுந்து கொள்ளை குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். இந்த வழக்கில், குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.