சிங்கப்பூரில் ஜங்ஷன் உணவகத்தில் தீ விபத்து.!! SCDF அதிரடி நடவடிக்கை..!!

சிங்கப்பூரில் ஜங்ஷன் உணவகத்தில் தீ விபத்து.!! SCDF அதிரடி நடவடிக்கை..!!

சிங்கப்பூர் பீஷானில் உள்ள ‘ஐங்ஷன் 8′ கடைத்தொகுதியின் முதல் தளத்தில் அமைந்துள்ள’யாகினிகு லைக்’ என்ற ஜப்பானிய பார்பெக்யூ (BBQ) உணவகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 11 ஆம் தேதி அன்று இரவு சுமார் 7: 10 மணியளவில் கடைத்தொகுதியின் முதல் தளத்தில் உள்ள உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடும் மேஜையில் இருந்த இறைச்சி வாட்டும் கருவியிலும், அதற்கு மேல் இருந்த புகைபோக்கிக் குழாய் அமைப்பிலும் திடீரென தீப்பற்றிக் கொண்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த சிங்கப்பூர்க் குடிமைப் தற்காப்புப் படையினர் (SCDF) தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடைத்தொகுதியில் இருந்த சுமார் 120 வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் போலீசாரால் வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்து நடந்த உணவகத்தைச் சுற்றியுள்ள சுமார் 40 மீட்டர் தூரத்தில் இருந்த மற்ற உணவகங்கள் மற்றும் கடைகளில் இருந்தவர்களும் வெளியேறினர்.

இந்தத் தீ விபத்தில் சிக்கி புகை மூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட அருகில் உள்ள கடையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் உடனடியாகச் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தீ விபத்து எச்சரிக்கை வந்தவுடன், தானியங்கி நீர் தெளிப்பான்கள் மற்றும் புகையைத் தடுக்கும் தீயணைப்புத் துறைகள் உடனடியாகச் செயல்பட தொடங்கின. இந்த உணவகம் இரண்டு மின் படிக்கட்டுகளுக்கு கீழே இருந்ததால், புகை மேல் தளங்களுக்குப் பரவாமல் தடுக்க இரண்டாம் தளத்தில் தீயணைப்புத் திரைகள் பயன்படுத்தப்பட்டன. விபத்து நடந்த ‘யாகினிகு லைக்’உணவகம் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் இதுபோன்ற தீ விபத்து நடப்பது இதுவே முதன்முறை என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.தீ விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.