சிங்டெல் லாபத்தில் பலத்த சரிவு..!! பின்னணி என்ன..?
சிங்கப்பூர் : சிங்டெல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம்(Net profit) நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 71.6% சரிவடைந்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 13) நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ நிதிநிலை அறிக்கையின்படி இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வீழ்ச்சி நிறுவனத்தின் வணிக நஷ்டத்தினால் ஏற்படவில்லை, கடந்த ஆண்டுடன் (2025) ஒப்பிடும்போது ஏற்பட்ட கணக்கு வழக்குகளின் மாற்றமே இதற்குக் காரணம் என்று சிங்டெல் நிறுவனம் விளக்கியுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் $2.88 பில்லியன் ஆக இருந்த நிகர லாபம், நடப்பு காலாண்டில் $818 மில்லியன் குறைந்துள்ளது. ஒருமுறை மட்டும் நிகழும் லாப/நஷ்ட கணக்குகளைத் தவிர்த்துப் பார்த்தால், நிறுவனத்தின் முக்கிய வணிக லாபம் 21% உயர்ந்து $831 மில்லியனாக அதிகரித்துள்ளது. சிங்டெல் குழுமத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு வருவாய் 4.9% உயர்ந்து S$3.56 பில்லியனாக எட்டியுள்ளது.
இந்தியாவின் ஏர்டெல் நிறுவனத்தில் தங்களுக்கு இருந்த பங்குகளை விற்றதன் மூலமூம், இன்டச் – கல்ஃப் எனர்ஜி நிறுவனங்களின் இணைப்பின் மூலமும் சிங்டெல்லுக்கு S$2.20 பில்லியன் கூடுதல் விதிவிலக்கு லாபம் கிடைத்தது. இந்த முறை அதுபோன்ற பெரிய முதலீட்டு வரவுகள் எதுவும் இல்லை. சிங்கப்பூரில் தொலைத்தொடர்புத் துறையில் நிலவும் கடுமையான விலைப்போட்டி காரணமாக, உள்நாட்டு செயல்பாட்டு வருவாய் 3.1% குறைந்து S$901 மில்லியனாக சரிந்துள்ளது
இந்தியாவின் ஏர்டெல் மற்றும் தாய்லாந்தின் AlS ஆகிய பிராந்திய கூட்டாண்மை நிறுவனங்களின் லாபப் பங்கு 16.1% உயர்ந்து S$543 மில்லியனை எட்டி உள்ளது. ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பு வலுவடைந்தாலும், செயல்பாட்டுத் திறன் கூடினதாலும் ஆப்டஸ் நிறுவனத்தின் லாபம் 14% அதிகரித்துள்ளது. சிங்டெல்லின் தரவு மைய பிரிவான Nxera மற்றும் செயற்கை நுண்ணறிவு மேகக்கணி (Al Cloud)சேவைகள் 18.9%வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.