சிங்கப்பூரில் மின்னணு சிகரெட் பயன்பாடு குறைவு..!! சுகாதார அமைச்சகம் அறிக்கை..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை), மின்னணு சிகரெட்டுகளைப் பயன்படுத்திய மற்றும் வைத்திருந்த குற்றத்திற்காகச் சிங்கப்பூரில் மொத்தம் 2,428 பேர் பிடிபட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் காலாண்டில் மாதத்திற்குச் சராசரியாக 809 வழக்குகள் பதிவாகி உள்ளது. புதிய சட்டங்கள் அமலுக்கு வருவதற்கு முன்பு இருந்த நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது சுமார் 30% குறைவாகும்.
பிடிபட்டவர்களில் 1,971 பேர் சாதாரண மின்னணு சிகரெட் பயன்படுத்துபவர்கள். மீதமுள்ள 457 பேர் தடை செய்யப்பட்ட வேதிப்பொருள் கலந்த மின்னணு சிகரெட்டுகளைப் பயன்படுத்தியவர்கள்.
இந்த காலகட்டத்தில் பல்வேறு பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் மூலம் 245 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு,சுகாதார அறிவியல் ஆணையத்திடம் (HSA) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
எல்லையோர சோதனைச் சாவடிகளில் தீவிரப்படுத்தப்பட்ட சோதனைகள் மூலம் 3,900 – க்கும் மேற்பட்ட மின்னணு சிகரெட் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சமூக ஊடகங்களில் இருந்த 600க்கும் மேற்பட்ட விளம்பரப் பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சமூகக் கூடங்கள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் அருகாமையில் அதிகாரிகள் தொடர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத மின்னணு சிகரெட் விநியோகச் சங்கிலியை உடைக்க எல்லையோரச் சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன
சிங்கப்பூரில் மின்னணு சிகரெட்டுகளை வாங்குவது, பயன்படுத்துவது அல்லது கைவசம் வைத்திருப்பது முற்றிலும் சட்டவிரோதமானது ஆகும். இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு 2,000 சிங்கப்பூர் டாலர் (SGD) வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அரசின் இந்தத் தொடர் விழிப்புணர்வு மற்றும் கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் காரணமாகவே, மின்னணு சிகரெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தற்பொழுது குறையத் தொடங்கியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.