சிங்கப்பூரில் பெண்ணைச் சூழ்ந்த நூற்றுக்கணக்கான தேனீக்கள்..மருத்துவமனையில் அனுமதி!

சிங்கப்பூரில் பெண்ணைச் சூழ்ந்த நூற்றுக்கணக்கான தேனீக்கள்..மருத்துவமனையில் அனுமதி!

சிங்கப்பூரின் ஜூரோங் வெஸ்ட் பகுதியில் சைக்கிள் ஓட்டிச் சென்ற பெண் ஒருவர், திடீரென நூற்றுக்கணக்கான தேனீக்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த நவம்பர் 15ஆம் தேதி காலை சுமார் 11:20 மணியளவில் ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 41 பகுதியில் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் சைக்கிள் ஓட்டிச் சென்ற பெண்ணை ஏராளமான தேனீக்கள் துரத்தித் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) ஜூரோங் லேக் லிங்க் பகுதியில் இருந்து உதவி கோரி அழைப்பு வந்துள்ளது. பின்னர் பாதிக்கப்பட்ட பெண் இங் டெங் ஃபொங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பெண்ணுக்கு அருகிலுள்ள லேக் கிராண்டே கூட்டுரிமை வீட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் உதவி செய்துள்ளனர். அவர்களின் உடனடி உதவிக்கு பெண்ணின் காதலர் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவம் நடந்த பகுதியில் பல பள்ளிகளும் குடியிருப்புகளும் அமைந்துள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தேசியப் பூங்காக் கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.