கோயில் உண்டியலைக் குறிவைத்த நபர்..!! சிங்கப்பூரை விட்டு தப்ப முயன்றபோது சிக்கினார்!
சிங்கப்பூரில் உள்ள கோயில் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து, காணிக்கை உண்டியலில் இருந்த பணத்தைத் திருட முயன்றதாக 36 வயது சீன நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜாலான் சென்யூம் (Jalan Senyum) பகுதியில் உள்ள கோயிலில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
அன்று பிற்பகல் சுமார் 1:25 மணியளவில் அப்பகுதியில் வீடு புகுந்து திருட முயற்சி நடந்ததாகக் காவல்துறைக்குப் புகார் கிடைத்தது. இதையடுத்து பெடோக் காவல் பிரிவினர் விசாரணையைத் தொடங்கினர்.
கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், மற்ற காவல் பிரிவுகள் மற்றும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் (ICA) உதவியுடன் சந்தேக நபரின் அடையாளத்தைக் கண்டறிந்தனர்.
இதற்கிடையில், அந்த நபர் சிங்கப்பூரை விட்டு வெளியேற முயன்றபோது குடிநுழைவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். புகார் கிடைத்த நான்கு மணி நேரத்திற்குள் காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
கோயிலின் காணிக்கை உண்டியலில் இருந்த பணத்தைத் திருட முயன்றதாகக் கூறப்படும் நிலையில், அவரது முயற்சி வெற்றிபெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அந்த நபர் நவம்பர் 17ஆம் தேதி வீடு புகுந்து திருட முயன்ற குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
இதற்கிடையே, பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் கடைகளின் கதவுகள், ஜன்னல்களைப் பாதுகாப்பாகப் பூட்ட வேண்டும் என்றும், அதிக அளவு பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைப் பாதுகாப்பற்ற இடங்களில் வைத்திருக்க வேண்டாம் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பாதுகாப்பு அலாரம், உணர்வி விளக்குகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவதுடன், அவை முறையாகச் செயல்படுகின்றனவா என்பதையும் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.