புருடென்ஷியல் பெயரில் புதிய மோசடி..!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

புருடென்ஷியல் பெயரில் புதிய மோசடி..!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

சிங்கப்பூரில் புருடென்ஷியல் (Prudential) நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி புதிய வகையான மோசடி நடைபெற்று வருவதாக அந்நிறுவனம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மோசடியில், பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, அவர்களது பெயரில் காப்பீட்டுக் கொள்கை வாங்கப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மோசடிக்காரர்கள் கூறுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, மோசடிக்காரர்கள் போலியான காப்பீட்டு பாலிசி ஆவணங்களை பாதிக்கப்பட்டவர்களிடம் காண்பித்து, அந்தப் பரிவர்த்தனையை ரத்து செய்வதற்கோ அல்லது விசாரிப்பதற்கோ உதவுவதாகக் கூறி தொடர்புகொள்கின்றனர்.

பின்னர், போலியான அதிகாரிகளிடம் அவர்களை இணைத்து, தனிப்பட்ட தகவல்களைப் பெறவோ அல்லது பணத்தைப் பெற்றுக்கொள்ளவோ முயற்சிக்கின்றனர்.


இந்த மோசடி நடவடிக்கைகளுக்கும் புருடென்ஷியல் சிங்கப்பூரின் கணினி அமைப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், நிறுவனத்தின் அமைப்புகளில் இருந்து ரகசியத் தகவல்கள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் அல்லது WhatsApp செய்திகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும், அனுப்பப்படும் இணைப்புகளைத் திறக்கவோ, PDF ஆவணங்களைத் திறக்கவோ, தனிப்பட்ட அல்லது நிதி தொடர்பான தகவல்களைப் பகிரவோ வேண்டாம் என்றும் புருடென்ஷியல் அறிவுறுத்தியுள்ளது.

தங்களை குறிவைத்து இதுபோன்ற மோசடி முயற்சி நடைபெற்றதாக சந்தேகிப்பவர்கள் அல்லது ஏற்கனவே தனிப்பட்ட/நிதித் தகவல்களைப் பகிர்ந்தவர்கள் உடனடியாக காவல்துறையைத் தொடர்புகொள்ள வேண்டும் என நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.