சிறார்களின் பார்வையில் எதிர்காலம் எப்படி இருக்கும்..? சிங்கப்பூரில் இலவச கண்காட்சி..!!
சிங்கப்பூர் கலை அரும்பொருளகம் (SAM) பிள்ளைகளின் எதிர்கால கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் “Hello Future: Adventure Awards” என்ற சிறப்புக் கண்காட்சியை நடத்துகிறது.
இந்த கண்காட்சி சிங்கப்பூர் தேசிய நூலகக் கட்டிடத்தில் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் இலவசமாக அனுமதிக்கப்படுகிறார்கள்.
இது சிங்கப்பூர் கலை அரும் பொருளகத்தின் புகழ்பெற்ற ‘Think! Contemporary Preschool’ திட்டத்தின் 7வது பதிப்பாகும்.
சிங்கப்பூர் முழுவதும் உள்ள 24 முன் பள்ளிகளைச் சேர்ந்த சிறு பிள்ளைகளின் வண்ணமயமான மற்றும் ஆக்கப்பூர்வமான கலைப்படைப்புகள் இங்கு காட்சிப்படுத்தப்பட உள்ளன.
பிள்ளைகள் டான்சோங் பகார் டிஸ்ட்ரிபார்க்கில் உள்ள Singapore Art Museum (SAM) Learning Gallery-க்குச் சென்று அங்குள்ள தற்காலக் கலைப்படைப்புகளைப் பார்த்து பெற்ற உத்வேகத்தின் அடிப்படையில் தங்களின் படைப்புகளை குழந்தைகள் உருவாக்கியுள்ளனர்.
பிள்ளைகள் தங்களின் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன், எதிர்காலம் குறித்த தங்களின் எண்ணங்களை ஓவியங்களாகவும் கதைகளாகவும் மாற்றியுள்ளனர்.
தனித்துவம் மற்றும் அடையாளம், சமூக மற்றும் ஒற்றுமை, மாறிவரும் சுற்றுச்சூழல் மற்றும் அதன் பாதுகாப்பு போன்ற முக்கிய கருத்துக்கள் மூலம் அவர்களது எண்ணங்களை வெளிப்படுத்தி உள்ளனர்.
சிறு பிள்ளைகள் தங்களின் கற்பனை திறன் மற்றும் விளையாட்டான சோதனைகள் மூலம் பல்வேறு வித்தியாசமான பொருட்களைப் பயன்படுத்தி இந்த எதிர்பாராத கலை வடிவங்களை உருவாக்கியுள்ளனர்.பள்ளி விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சென்று பார்க்க இது ஒரு சிறந்த இடமாகும்.