தொங் சாய் மருத்துவமனை பெயரில் போலி சுகாதாரப் பொருட்கள்..!! HSA எச்சரிக்கை.!

தொங் சாய் மருத்துவமனை பெயரில் போலி சுகாதாரப் பொருட்கள்..!! HSA எச்சரிக்கை.!

சிங்கப்பூரில் பிரபலமான தொங் சாய் மருத்துவமனையின் (Thong Chai Hospital) பெயர் மற்றும் லோகோவைப் பயன்படுத்தி போலியான சுகாதாரப் பொருட்கள் இணையத்தில் விற்பனை செய்யப்படுவதாக சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘பு ஷென் யி ஜிங் வான்’ எனப்படும் பொருள், தொங் சாய் மருத்துவமனையின் பெயர் மற்றும் லோகோ அச்சிடப்பட்ட போலி மருந்து பொருள் Facebook உள்ளிட்ட இணைய தளங்களில் விற்பனை செய்யப்படுவதாக அதன் உற்பத்தியாளர் HSA-விடம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிறுவனம் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளது.


மேலும், தொங் சாய் மருத்துவமனையின் லோகோவைப் பயன்படுத்தி எடை குறைக்கும் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், அத்தகைய எடை குறைப்பு பொருட்களை மருத்துவமனை விற்பனை செய்வதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை ஏற்கனவே மூன்று முறை காவல்துறையில் புகார் அளித்துள்ளது.

இதையடுத்து, சந்தேகத்திற்குரிய போலிப் பொருட்கள் இணைய தளங்களில் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை HSA கண்காணித்து வருகிறது.
பொருட்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்வதற்காக சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்களுடனும் HSA தொடர்பில் உள்ளது.

 

பொருட்கள் போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டால், அவற்றை விற்பனை செய்யும் ஆன்லைன் பக்கங்கள் மற்றும் விற்பனையாளர் கணக்குகளை நீக்க e-commerce தளங்களுடன் இணைந்து HSA நடவடிக்கை எடுக்கும்.

போலியான சுகாதாரப் பொருட்களுக்கும் உண்மையான பொருட்களுக்கும் இடையிலான வித்தியாசம் மிகவும் குறைவாக இருக்கலாம் என்பதால், அவற்றை வெறும் கண்ணால் பார்த்து அடையாளம் காண்பது கடினம் என HSA தெரிவித்துள்ளது.

 

 

சில போலிப் பொருட்களில் தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் இருக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. AI மூலம் உருவாக்கப்பட்ட போலி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தியும் சில அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்கள் மக்களை ஏமாற்றக்கூடும் என HSA குறிப்பிட்டுள்ளது.

எனவே, சுகாதாரப் பொருட்களை வாங்கும் போது நம்பகமான கடைகள், மருந்தகங்கள் அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டுமே பயன்படுத்துமாறு HSA பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

போலி சுகாதாரப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வது மற்றும் விநியோகிப்பதை HSA தீவிரமாகக் கருதுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, S$5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.