சிங்கப்பூர் பெயரில் போலி தயாரிப்பு முத்திரை!! சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிங்கப்பூர் பெயரில் போலி தயாரிப்பு முத்திரை!! சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை..!!

சீனாவில் தயாரிக்கப்பட்ட மெத்தைகளை சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்டவை எனப் பொய்யான முத்திரையிட்டு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததாக சிங்கப்பூர் சுங்கத்துறை 3 நபர்கள் மற்றும் ஒரு நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளது.

ஹெல்தி லிவிங் பயோடெக் என்ற சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் மீதும், சிங்கப்பூரைச் சேர்ந்த பெர்னார்ட் கோ வீ யியாப் (வயது 54) மற்றும் யுஷி (வயது28), சீன நாட்டைச் சேர்ந்த சூ சின் (வயது 37) ஆகிய நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் மெத்தைகளுக்கு விதிக்கப்படும் கூடுதல் சுங்க வரிகளைக் தவிர்ப்பதற்காக இந்த மோசடி அரங்கேறி உள்ளது.

இந்த மோசடித் திட்டம் மூலம் சுமார் S$1.9 மில்லியன் (சுமார் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள பொருள்கள் போலியான ஆவணங்கள் மூலம் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இக்குற்றங்கள் ஆகஸ்ட் 2024 முதல் செப்டம்பர் 2025 வரையிலான காலகட்டத்தில் நடந்துள்ளதாக சுங்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடி தவிர, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பைத் தருவதாகக் காட்டி, சிங்கப்பூரின் GST வரியில் சுமார் S$111, 000 ஏய்ப்பு செய்ததாகவும் இந்த நிறுவனம் மற்றும் நபர்கள் மீது தனியாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சுங்கத்துறை இந்த விவகாரம் குறித்து கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதுபோன்ற தவறான வணிக அறிவிப்புகள் சிங்கப்பூரின் உலகளாவிய வர்த்தக நற்பெயரைக் கெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.