சிங்கப்பூரில் பயங்கர விபத்து..! 5 கார்கள் - மோட்டார் சைக்கிள் மோதல்..!!
சிங்கப்பூர்: கெய்லாங் ஈஸ்ட் சென்ட்ரல் பகுதியில் 5 கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட பயங்கர சாலை விபத்து நேற்று (ஆகஸ்ட் 14) மாலை நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் 67 வயதுடைய கார் ஓட்டுநர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நேற்று (ஆகஸ்ட் 14) மாலை சுமார் 5:55 மணியளவில் கெய்லாங் ஈஸ்ட் சென்ட்ரல் மற்றும் கெய்லாஸ் ஈஸ்ட் அவென்யூ 2 சந்திப்பில், சிம்ஸ் டிரைவ் நோக்கிச் செல்லும் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக சிங்கப்பூர் காவல்துறையினரும், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும் (SCDF) தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களான திரட்ஸ்(Threads) மற்றும் டெலகிராமில்(Telegram) விபத்தை நேரில் பார்த்தவர்கள் விபத்து குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்துள்ளனர்.
அதில் விபத்துக்குள்ளான வாகனங்கள் அங்கிருந்த 3 வழிகளையும் முழுமையாக அடைத்து நிற்கிறது. இதில் ஒரு மோட்டார் சைக்கிள் சாலை முதல் வழியில் சாய்ந்து கிடந்தது.
அதற்கு சற்று முன்னே கதவுகள் சேதமடைந்த நிலையில் 3 கார்களும், அவற்றை தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக மோதிய நிலையில் மேலும் 2 கார்கள் இடிபாடுகளுடன் இருப்பதை அந்த வீடியோவில் காண முடிகிறது.
விபத்தின் தாக்கத்தால் அங்கிருந்த ஒரு மின்விளக்கு கம்பம் பலத்த சேதமடைந்து சாய்ந்துள்ளது.
இந்த விபத்தை தொடர்ந்து பயா லேபார் சாலைக்கு அடுத்துள்ள கெய்லாங் ஈஸ்ட் சென்ட்ரல் சாலையின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த விபத்தில் காயம் அடைந்த 67 வயதுடைய ஓட்டுநருக்கு விபத்து நடந்த இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு, சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாக SCPF கூறியுள்ளது.
தற்போது அவர் காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்ததற்கான முழுமையான காரணம் குறித்து காவல்துறை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.