சைனாடவுனில் இந்த ஆண்டு பிரம்மாண்ட விளக்குகள் இல்லை..! அதற்குப் பதிலாக என்ன நடக்கிறது.?

சைனாடவுனில் இந்த ஆண்டு பிரம்மாண்ட விளக்குகள் இல்லை..! அதற்குப் பதிலாக என்ன நடக்கிறது.?

சிங்கப்பூரின் சைனாடவுனில் (Chinatown) ஒவ்வொரு ஆண்டும் மத்திய இலையுதிர் கால விழாவை முன்னிட்டு நடைபெறும் பிரம்மாண்டமான விளக்கலங்காரம், இந்த ஆண்டு முக்கிய சாலைகளில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக, சமூகத்தை மையமாகக் கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மத்திய இலையுதிர் கால விழா கொண்டாடப்பட உள்ளது.
வழக்கமாக சைனாடவுனின் Eu Tong Sen Street மற்றும் New Bridge Road ஆகிய முக்கிய சாலைகள், சந்திரன், முயல் உள்ளிட்ட பல்வேறு வடிவிலான வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.

இந்த அலங்காரங்களைக் காணவும், புகைப்படங்கள் எடுக்கவும் ஆண்டுதோறும் ஏராளமான பொதுமக்கள் சைனாடவுனுக்கு வருவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு இந்த இரண்டு முக்கிய சாலைகளிலும் வழக்கமான விளக்கலங்காரங்களை அமைக்க சைனாடவுன் விழாக் குழு முடிவு செய்யவில்லை. மாறாக, குறிப்பிட்ட பகுதிகளில் விளக்குகள் மற்றும் சமூக நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, “விளக்குகளை ஏற்றி, வாழ்த்துகளைப் பகிர்வோம்” என்ற நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது வாழ்த்துகளை விளக்குகளில் தாங்களே எழுதி, அவற்றை Chinatown Square மற்றும் Banda Street ஆகிய பகுதிகளில் காட்சிப்படுத்தலாம்.

அடுத்த மாதம் 11ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை, Chinatown Community Club மற்றும் பல்வேறு சமூக நிகழ்ச்சி இடங்களில் அமைக்கப்படும் அரங்குகளில் பொதுமக்கள் தங்களது வாழ்த்துகளை விளக்குகளில் எழுதும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

இந்த மாற்றம் குறித்து சைனாடவுன் விழாக் குழுத் தலைவர் பாய் சிங் ஃபூ கூறுகையில், சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்பு சைனாடவுனில் மத்திய இலையுதிர் காலக் கொண்டாட்டங்கள் தொடங்கியபோது, இதுபோன்ற பெரிய அளவிலான விளக்கலங்காரங்கள் அதிகம் இல்லை என்று தெரிவித்தார்.

காலப்போக்கில் சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளிலும், குறிப்பாக Gardens by the Bay மற்றும் Jurong Lake Gardens போன்ற இடங்களிலும் பெரிய அளவிலான விளக்கலங்காரங்கள் மற்றும் விழாக்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன.


இதனால், சைனாடவுன் தனது கொண்டாட்ட முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, உள்ளூர் சமூகத்தை மையமாகக் கொண்ட புதிய பாரம்பரியத்தை உருவாக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக அவர் கூறினார்.
இந்த ஆண்டு மத்திய இலையுதிர் காலக் கொண்டாட்டங்கள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்குகின்றன.

இதில் நேரடி விளக்குத் தயாரிப்பு போட்டி, சமூக விளக்குப் பேரணி, மூன்கேக் சுவை அறிமுக நிகழ்ச்சி, தேநீர் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற உள்ளன.

 

மேலும், கையால் எழுதப்பட்ட வாழ்த்துச் செய்திகளுடன் காட்சிப்படுத்தப்படும் விளக்குகளைப் பார்வையிடும் பொதுமக்கள், Chinatown Complex பகுதியில் நடைபெறும் விளக்குப் புதிர் போட்டியிலும் கலந்துகொள்ளலாம்.
இந்தப் புதிர்கள் சிங்கப்பூரின் நான்கு அதிகாரப்பூர்வ மொழிகளிலும் இடம்பெறும்.

Chinatown Square-ஐத் தவிர, இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் River Place, Havelock View மற்றும் Jin Shui–Farrer Park உள்ளிட்ட சமூகப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளன.


வழக்கமான பிரம்மாண்ட விளக்கலங்காரத்திற்கு பதிலாக, உள்ளூர் மக்களின் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில் சமூக நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதே இந்த ஆண்டு சைனாடவுனின் புதிய அணுகுமுறையாக அமைந்துள்ளது.

அதேநேரத்தில், சீனப் புத்தாண்டு காலத்தில் சைனாடவுனில் நடைபெறும் பாரம்பரிய அலங்காரங்கள் தொடர்ந்து இடம்பெறும் என்றும் விழாக் குழு தெரிவித்துள்ளது.