AI பயனர்களுக்கு எச்சரிக்கை..!!இந்த நிதி தகவல்களை பகிராதீர்கள்..!!
செயற்கை நுண்ணறிவு(AI) இன்று முதலீடு,சேமிப்பு வரித் திட்டமிடல் உள்ளிட்ட நிதி தொடர்பான விஷயங்களில் பலரின் ஆலோசராக மாறி வருகிறது.
ChatGpt, Gemini, Claude போன்ற Al கருவிகளிடம் முதலீட்டு ஆலோசனைகள் கேட்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் இதன் பின்னால் கவலைக்குரிய அபாயங்களும் இருப்பதாக நிதி வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நிதி ஆலோசனை என்பது வெறும் எண்கள் மற்றும் கணக்குகள் மட்டும் அல்ல. ஒருவரின் வருமானம், குடும்ப சூழல், கடன்கள், முதலீட்டு இலக்குகள், வயது, வரி நிலை, ஆபத்தை ஏற்கும் மனநிலை போன்ற பல அம்சங்களை பொறுத்தே சரியான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
ஆனால் Al-க்கு முழுமையான தகவல் வழங்கப்படாத போது, அது தவறான அல்லது நடைமுறைக்கு ஒத்துவராத ஆலோசனைகளை வழங்க வாய்ப்புள்ளது.
பலர் Al-யிடம் ஆலோசனை பெறும்போது பான் நம்பர் (PAN Number), ஆதார் நம்பர்(Adhar Number), வங்கி கணக்கு விவரங்கள்(Bank Account Details), கிரெடிட் கார்டு(Credit Card) தகவல்கள் போன்றவற்றையும் பகிர்ந்து விடுகின்றனர். இதுவே மிகப்பெரிய ஆபத்தாக பார்க்கப்படுகிறது.
AI தளங்கள் இந்த தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம் அல்லது பகுப்பாய்வுக்கு பயன்படுத்தலாம். எதிர்காலத்தில் தரவு கசிவு ஏற்பட்டால், அந்த தகவல்கள் மோசடி நம்பல்களின் கைகளில் சிக்க நேரிடலாம்.
குறிப்பாக இலவச சேவைகளைப் பயன்படுத்தும் போது, கூடுதல் கவனம் தேவை என்பது நிபுணர்களின் வலியுறுத்தலாக உள்ளது.
ஆதார் எண், பேன் நம்பர், வங்கி கணக்கு விவரங்கள், டெபிட்/கிரெடிட் கார்டு எண்கள், ஓடிபி தகவல்கள், முழுமையான வருமான விவரங்கள், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை பகிரக்கூடாது.
நிதி ஆவணங்களை AI-க்கு வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலும், அடையாளம் காணக்கூடிய தகவல்களை மறைத்த பிறகே பகிர வேண்டும் என்ற வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றொரு கவலையையும் தற்போது முன்வைத்திருக்கிறது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான முதலீட்டாளர்கள் ஒரே மாதிரியான Al மாடல்களை பயன்படுத்தத் தொடங்கினால், சந்தை ஏற்ற இறக்கங்களின் போது எல்லோரும் ஒரே நேரத்தில் வாங்கவோ, விற்கவோ முடிவு செய்யலாம். இது பங்குச்சந்தை அதிர்வுகளை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்படுகிறது.
அப்படியானால் முதலீட்டு நோக்கங்களுக்கு பயன்படுத்தலாமா..??வேண்டாமா..?? என கேட்டால், முதலீட்டு வாய்ப்புகளை புரிந்து கொள்வது, நிதி சொற்களின் அர்த்தத்தை தெரிந்து கொள்வது, வரி விதிமுறைகள் பற்றி அடிப்படை தகவல்களைப் பெறுவது போன்ற பணிகளில் மட்டுமே Al- யைப் பயன்படுத்த சொல்கிறார்கள்.
சரியான விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உருவாக்கப்பட்டால், Al எதிர்காலத்தில் நிதி உலகின் சிறந்த துணை ஆலோசகராக மாறும். ஆனால், கண்மூடித்தனமா நம்பி முடிவெடுப்பது நிதி இழப்புகளையும், தனி உரிமை பிரச்சினைகளையும் ஏற்படுத்த கூடும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.