கடும் வெயிலில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் உருகுமா..? உண்மை இதுதான்!

கடும் வெயிலில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் உருகுமா..? உண்மை இதுதான்!

இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த நோட்டுகள் கடும் வெயிலிலோ அல்லது சட்டப்பைக்குள் வைத்தால் உடல் வெப்பத்தால் உருகிவிடுமா? என்ற சந்தேகம் சிலருக்கு எழுந்திருக்கிறது.

உண்மையில் இந்த ரூபாய் நோட்டுகள் சாதாரண பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படுவதில்லை. அதிக வெப்பத்தையும் எளிதில் கிழியாமல் அன்றாட பயன்பாட்டுக்கு தாக்குபிடிக்கும் வகையிலும் சிறப்பு வகை பாலிமர் பொருளால் தயாரிக்கப்படுகின்றன.

இந்த ரூபாய் நோட்டுகள் பையாக்சியலி ஓரியண்டெட் என்ற சிறப்பு வகை பாலிமர் பொருளில் தயாரிக்கப்படுகின்றன. இவை காகித நோட்டுகளை விட அதிக உறுதியானவை. தண்ணீர், ஈரப்பதம், அழுக்கு மற்றும் அடிக்கடி பயன்படுத்துவதால் ஏற்படும் சேதங்களை எளிதில் தாங்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் நோட்டுகளை நீண்ட நேரம் சாட்டைப்பை அல்லது பேண்ட் பையில் வைத்தால் உடல் வெப்பத்தால் அவை சேதமடையும் என்று சிலர் நினைக்கிறார்கள். இதில் உண்மை இல்லை. மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மட்டுமே.

பிளாஸ்டிக் நோட்டுகள் இதைவிட அதிகமான வெப்பநிலையைத் தாங்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. எனவே அவற்றை பை, பர்ஸ் அல்லது சட்டைப்பையில் வைத்திருந்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

சாதாரண வெயில் அல்லது கோடைகால வெப்பத்தால் பிளாஸ்டிக் நோட்டுகள் உருகாது. ஆனால் நெருப்பு, அயன் பாக்ஸ் அல்லது தொழிற்சாலைகளில் காணப்படும் மிக அதிக வெப்பம் போன்ற சூழல்களில் மட்டுமே அவை சேதம் அடையக் கூடும்.

பிளாஸ்டிக் நோட்டுகளின் தனிச்சிறப்பு என்னவென்றால், நீண்ட காலம் பயன்படுத்தும் வகையில் ஆனது. அதாவது அதிக ஆயுள் கொண்டது. இவை எளிதில் கிழியாது. தண்ணீரால் சேதம் அடையாது. நீண்ட காலம் பயன்படுத்த முடியும். மேலும் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட நவீன அம்சங்கள் பயன்படுத்தப்படுவதால் போலி நோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்த உதவக்கூடும்.

ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, ருமேனியா, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகள் பாலிமர் நோட்டுகளை வெற்றிகரமாக பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.