24.81 கிராம் ஹெராயின் கடத்தல்.!! 79 வயது முதியவருக்கு சிங்கப்பூரில் தூக்கு..!!

24.81 கிராம் ஹெராயின் கடத்தல்.!! 79 வயது முதியவருக்கு சிங்கப்பூரில் தூக்கு..!!

சிங்கப்பூரில் 24.81 கிராம் ஹெராயின் போதைப்பொருளைக் கடத்திய குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 79 வயது குடியுரிமையற்ற நபர் டியோ இயூ கின் டீக்கு, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2020 ஜனவரி 14ஆம் தேதி, கேலாங் பாரு பகுதியில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB) அதிகாரிகள் டியோவை கைது செய்தனர்.

அப்போது, மலேசியாவைச் சேர்ந்த 29 வயது யோகேஸ்வரன் மனோகரனிடமிருந்து நீல நிறப் பை ஒன்றைப் பெற்றுக்கொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பையை சோதனையிட்டபோது, அதில் இருந்த 2 பொட்டலங்களில் 24.81 கிராமுக்குக் குறையாத ஹெராயின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அருகிலிருந்த வாகன நிறுத்துமிடத்தில் யோகேஸ்வரனும் கைது செய்யப்பட்டார்.

 

சிங்கப்பூரின் போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்படி, 15 கிராமுக்கு மேல் ஹெராயின் கடத்தியது நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும்.

நீதிமன்ற விசாரணையின்போது, அதிக அளவு போதைப்பொருளை தனது சொந்தப் பயன்பாட்டிற்காகவே வாங்கியதாக டியோ தரப்பில் வாதிடப்பட்டது.

 

ஆனால், அவரது வேலையில்லாத நிலை மற்றும் அவரது வீட்டில் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதை நீதிமன்றம் கருத்தில் கொண்டு அந்த வாதத்தை நிராகரித்தது.

இதையடுத்து, 2023 ஜூன் 19ஆம் தேதி டியோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு சட்டப்படி வழங்கப்பட்ட அனைத்து மேல்முறையீட்டு வாய்ப்புகளும் முடிவடைந்ததுடன், அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 7ஆம் தேதி அவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.